கோவை விமான நிலையத்தில் ஆகஸ்ட் மாதம் பயணிகள் எண்ணிக்கை 2.79 லட்சமாக பதிவு


கோவை விமான நிலையம். (கோப்பு படம்)

கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பயணிகள் மற்றும் சரக்கு கையாளுகை அதிகரித்துள்ளது. நிலையான வளர்ச்சி பதிவு செய்யப்படுவதற்கு தொழில்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர், அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கும் விமான சேவைகள் வழங் கப்படுகின்றன. ஆண்டுதோறும் கோவை மற்றும் சுற்றுப்புற ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 30 லட்சம் மக்கள் கோவை விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

விமான நிலைய விரிவாக்க திட்டத்துக்கு நில ஆர்ஜித பணிகள் நிறைவடைந்து நிலங்கள் ஒப்படைக்கப்பட்ட நிலையில் விரைவில் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கோவை விமான நிலையத்தில் மாதாந்திர பயணிகள் மற்றும் சரக்கு கையாளுகையில் நிலையான வளர்ச்சி பதிவு செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் சர்வதேச பிரிவில் 19,751 பேர், உள்நாட்டு பிரிவில் 2,59,600 பேர் என மொத்தம் 2,79,351 பேர் பயணம் செய்துள்ளனர். சரக்கு போக்குவரத்து பிரிவில் ஆகஸ்ட் மாதம் சர்வதேச பிரிவில் 1,037 டன், உள்நாட்டு பிரிவில் 202 டன் என மொத்தம் 1,039 டன் சரக்கு கையாளப்பட்டுள்ளது.

கரோனா நோய்தொற்று அதை தொடர்ந்து உலகளவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையால் ஏற்பட்ட தாக்கத்தில் இருந்து விமான போக்குவரத்து மீ்ண்டு நிலையான வளர்ச்சியை நோக்கி செல்லத் தொடங்கியுள்ளது பயணிகள் மற்றும் தொழில்துறையினர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து தொழில்துறை யினர் கூறும் போது, கோவை விமான நிலையத்தில் நிலையான வளர்ச்சி பதிவு செய்யப்படுவது மிகவும் வரவேற்கத்தக்கது. விரிவாக்க திட்டத்துக்கு தமிழக அரசு நிபந்தனைகள் இன்றி நிலங்களை ஒப்படைக்க முன்வந்துள்ளதால் எதிர்வரும் நாட்களில் கோவை விமான நிலையத்தில் சர்வதேச தர அந்தஸ்துக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். இதனால் எதிர்வரும் காலங்களில் விமான நிலையத்தின் வளர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கும். என்றனர்.

மேலும் ஒரு விமான சேவை: கோவையில் இருந்து தற்போது சிங்கப்பூருக்கு ஸ்கூட் நிறுவனம் சார்பில் விமான சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில் இண்டிகோ நிறுவனம் சார்பில் கோவை - சிங்கப்பூர் இடையே நேரடி விமான சேவை தொடங்க அனுமதி பெறப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

x