விழுந்த எடத்துல தான் எந்திருப்பேன்னு சொல்ல இது என்ன சினிமாவாய்யா... கமலை கலாய்த்த கே.என்.நேரு!


கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியையும் திமுக தனது கூட்டணியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறது. கமல்ஹாசன் போட்டியிட்டால் அந்தக் கட்சிக்காக சென்னையில் கூட சீட் ஒதுக்க திமுக தலைமை தயாராக இருக்கிறது. ஆனால், அவர் கோவை தான் தனக்கு வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்.

கோவை தொகுதி தற்போது மார்க்சிஸ்ட்கள் வசம் இருக்கிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் தனித்துக் களமிறங்கிய மநீம சுமார் 1 லட்சத்து 45 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது. இதையடுத்து 2021 சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனே நேரடியாக களமிறங்கினார்.

அமைச்சர் நேரு

அந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரை மூன்றாம் இடத்துக்கு தள்ளி இரண்டாம் இடத்துக்கு வந்தார் கமல். இவருக்கும் வெற்றிபெற்ற பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கும் வாக்கு வித்தியாசம் சுமார் 1,700 ஓட்டுகள் தான். இதையெல்லாம் மனதில் வைத்து கமல் மீண்டும் கோவைக்கே அடிபோடுகிறார்.

முரளி அப்பாஸ்

இதுகுறித்து பேச்சு வந்தபோது, “கமலுக்கு சென்னைக்குள்ள ஒரு தொகுதி கேட்டாலும் குடுப்பாங்கய்யா... உங்காளு ஏன் கோயமுத்தூரே வேணும்னு வம்படியா நிக்கிறாரு?” என்று மநீம செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸிடம் கேட்டாராம் அமைச்சர் நேரு. அதற்கு அவர், “எங்க தலைவரு தோத்த இடத்துலயே நின்னு ஜெயிச்சுக் காட்டணும்னு சொல்றாருண்ணே” என்றாராம்.

அதைக் கேட்டு சிரித்த நேரு, “விழுந்த எடத்துலயே தான் எந்திருப்பேன்னு சொல்றதுக்கு இது என்ன சினிமாவாக்கும்; அரசியல்யா... போயி உங்க தலக்கிட்ட சொல்லு” என்று கிண்டலடித்தாராம்.

x