குமரியில் 140 மி.மீ மழை - கடல் போல் காட்சியளிக்கும் திற்பரப்பு அருவி!


குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் திற்பரப்பு அருவி ஆர்ப்பரித்து கொட்டுவதுடன் கடல் போல் காட்சியளிக்கிறது.

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் வியாழக்கிழமை கனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக மயிலாடியில் 140 மி.மீ மழை பதிவானது. திற்பரப்பு அருவி ஆர்ப்பரித்து கொட்டுவதால் கடல் போல் காட்சியளிக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக விடாமல் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. வருகிற 27ந் தேதி வரை இம்மழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில், நேற்றையில் இருந்து விடிய விடிய கொட்டிய மழை இன்றும் நீடித்தது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணைகளுக்கும் மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் பேச்சிப்பாறை அணையில் நீர்மட்டம் 45.25 அடியாக உள்ள நிலையில் அணைக்கு 1239 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வருகிறது. மறுகால் மீண்டும் திறக்கப்பட்டது வினாடிக்கு 520 கன அடி தண்ணீர் மறுகாலில் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் 636 கன அடி தண்ணீர் வெளியாகிறது. மேலும் மதகு வழியாக 636 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அந்த வகையில் மொத்த 1200 கன அடி வரை பேச்சிப்பாறையில் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

மறுகாலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், குளிக்கவோ கன்று காலிகளை குளிப்பாட்டவோ, நீர் நிலைகளில் இறங்கவோ வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுவதால் கடல் போல் காட்சியளிக்கிறது. சுற்றுலா பயணிகள் அப்பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இனணரு பெய்த கனமழை காரணமாக பல்வேறு ஆற்றூர், குலசேகரம், தக்கலை,ராமன்புதூர், பறக்கை பகுதிகளில் பல இடங்களில் மரங்கள் சாலையில் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதனை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து சீர் செய்து மரங்கள் அகற்றப்பட்டது.

மாவட்டத்தில் கனமழை காரணமாக 5 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. நல்வாய்ப்பாக உயிர்சேதம் இல்லை. குமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக மயிலாடியில் 140 மில்லி மீட்டர் மழை பெய்திருந்தது. தக்கலையில் 83, குருந்தன்கோட்டில் 82, மாம்பழத்துறையாறில் 78, கொட்டாரத்தில் 81 மிமீ., மழை பதிவானது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 51 அடியாக ஆகி உள்ளது. குமரி மாவட்டத்தில் நேற்று மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. ரப்பர் பால்வெட்டும் தொழில், தேங்காய் வெட்டும் தொழில் உட்பட பல தொழில்கள் பாதிக்கப்பட்டு பொது மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது.

x