சென்னையில் அஷ்யூரன்ட் நிறுவனத்தின் உலகளாவிய திறன் மையம்: சிகாகோவில் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்


சென்னை: அமெரிக்காவின் ஈட்டன் நிறுவனத்துடன் 500 பேருக்கு வேலையளிக்கும் வகையில் ரூ.200 கோடியில் உற்பத்தி விரிவாக்கம் மற்றும் அஷ்யூரன்ட் நிறுவனம் சார்பில் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையம் ஆகியவற்றை சென்னையில் அமைக்க முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வர் ஸ்டாலின் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். செப்டம்பர் 3-ம்தேதி சிகாகோ சென்றார். அங்கு முதல்வர் முன்னிலையில் ஈட்டன்,அஷ்யூரன்ட் ஆகிய 2 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் விவரம் வருமாறு: உலகின் 35 நாடுகளில் சுமார் 208 இடங்களில் உற்பத்தி வசதிகள் கொண்ட ‘ஃபார்ச்சூன் 500’ நிறுவனங்களில் ஒன்று ஈட்டன் நிறுவனம் (Eaton Corporation). மேலாண்மை நிறுவனமான இது, தரவு மையம், பயன்பாடு, தொழில் துறை, வணிகம், இயந்திர கட்டிடம், குடியிருப்பு, விண்வெளி, இயக்க சந்தைகளுக்கான உற்பத்தி மற்றும் பகிர்மான பணிகளை மேற்கொள்கிறது. குடியிருப்பு, வணிக கட்டிடம், மின்சார வாகனங்கள், தரவு மையம் மற்றும் eVTOL வாகனங்களுக்கான ஆற்றல் உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம் மற்றும் நுகர்வுக்கு இதன் தயாரிப்புகள் பயன்படுகின்றன.

இந்த நிலையில், ரூ.200 கோடிமுதலீட்டில், 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் தற்போது உள்ள ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி வசதியை விரிவாக்குவதுடன், ஆராய்ச்சி, மேம்பாடு, உலகளாவிய பயன்பாட்டு பொறியியல் மையத்தை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஒப்பந்த நிகழ்வில் ஈட்டன் நிறுவனத்தின் குளோபல் எனர்ஜி தலைவர் மேத்யூ ஹாக்மேன் மற்றும்உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து, ‘ஃபார்ச்சூன் 500 இன்சூரன்ஸ்’ நிறுவனங்களில் ஒன்றான அஷ்யூரன்ட் நிறுவனம் (Assurant Inc.) சார்பில் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன்மையத்தை சென்னையில் அமைக்கமுதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிறுவனம்அட்லான்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. சொத்து,விபத்து, நீட்டிக்கப்பட்ட சாதனங்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பலவிதமான சிறப்பு மற்றும் முக்கியசந்தை காப்பீட்டு திட்டங்களை வழங்கி வருகிறது. ஒப்பந்த நிகழ்வில், அஷ்யூரன்ட் நிறுவனத்தின் செயல் துணை தலைவர் பிஜு நாயர் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். தமிழக தொழில் துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா, துறை செயலர் வி.அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் வே.விஷ்ணு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சைக்கிள் பயணம்; ராகுலின் கேள்விக்கு ஸ்டாலின் பதில்: சிகாகோ கடற்கரையில் முதல்வர் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டதற்கு, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, ‘‘சகோதரரே, சென்னையில் நாம் இணைந்து சைக்கிள் ஓட்டுவது எப்போது?’’ என கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள முதல்வர், ‘‘அன்புக்குரிய சகோதரரே, உங்களால் எப்போது முடியுமோ, அப்போது இருவரும் சைக்கிளில் சென்னையை வலம் வரலாம். சுவையான தென்னிந்திய மதிய விருந்தை என் வீட்டில் உண்டு மகிழலாம்’’ என்று ராகுல் காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்

x