இன்று முதல் தமிழகத்தில் 5 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்!


தமிழகத்தில் இன்று முதல் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஒவ்வொரு நாளும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பல நகரங்களிலும் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலையில் இன்று முதல் மேலும் ஐந்து டிகிரி வரை வெப்பம் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் மார்ச் 5-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கக் கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 93 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 77 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக் கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் இன்று முதல் பொதுமக்கள் அத்தியாவசியமான காரணங்கள் இருந்தால் தவிர வெளியில் செல்வதைத் தவிர்க்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

x