கூச்சமே இல்லாமல் எப்படி வருகிறீர்கள்?: பிரதமர் மோடி மீது சாட்டை சொடுக்கிய திமுக!


நெல்லை பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி

இரண்டுநாள் பயணமாக தமிழ்நாட்டுக்கு வருகைதந்த பிரதமர் நரேந்திர மோடி, திமுக குறித்து பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார். அதற்கு திமுக பொருளாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசு முறைப் பயணமாகத் தமிழ்நாட்டுக்கு வந்து, அரசியல் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு, தாம் பிரதமர் என்பதையே மறந்து, அரசியல் அவதூறுகளை அள்ளி இறைத்துவிட்டுப் போயிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

தமிழ்நாட்டுக்கு இந்தப் பத்தாண்டு காலத்தில் செய்த சாதனைகளைப் பட்டியலிட்டிருந்தால் அவரைப் பாராட்டலாம். பத்தாண்டு காலத்தில் இந்திய நாட்டுக்குச் செய்து காட்டிய வளர்ச்சியைச் சொல்லியிருந்தால் வரவேற்கலாம். அப்படி எதுவும் இல்லாததால், திருப்பூர் கூட்டத்தில் ஜெயலலிதாவை வானளாவப் புகழ்ந்தும், திருநெல்வேலி கூட்டத்தில் திமுகவைக் கடுமையாக விமர்சித்தும் பேசிவிட்டுப் போயிருக்கிறார் பிரதமர்.

திமுக அரசைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் பிரதமர். தனக்கு எதிரியே இல்லை என்ற இறுமாப்பில் இருந்த பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தையும் இணைத்து இந்தியா கூட்டணி அமைக்க அடித்தளம் அமைத்தவர் மு.க.ஸ்டாலின் என்பதுதான் பிரதமர் மோடியின் கோபத்துக்குக் காரணம்.

டி.ஆர். பாலு

பின்னலாடை வர்த்தகச் சந்தைக்கான வாசலை வங்கதேசத்துக்குத் திறந்துவிட்டு, திருப்பூரை வஞ்சித்த மோடி, கொங்கு மண்ணின் பெருமையை எப்படிப் பேச முடிகிறது? பின்னலாடை வர்த்தகத்தை நசுக்கிவிட்டு, 'தொழில்துறையில் கொங்கு மண் முக்கியப் பங்காற்றுகிறது' எனக் கூசாமல் பொய் சொல்கிறார்.

'காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்தபோது தமிழ்நாட்டிற்கு ஒன்றும் செய்யவில்லை' எனப் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. 2004 - மார்ச் 2013 வரை டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சியில் அங்கம் வகித்தபோது தமிழ்நாட்டிற்கு திமுக கொண்டு வந்த திட்டங்கள் என்னென்ன என பிரதமர் தன்னிடம் இருக்கும் ஏஜென்சிகளிடம் கேட்டிருந்தால், சொல்லியிருப்பார்களே! சிபிஐ, வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, என்ஐஏ, ஐ.பி என அதிகார அமைப்புகள் எல்லாம் பாஜகவுக்குச் சேவை செய்யவே நேரம் போதவில்லையே!

சிறப்புத் திட்டம் ஏதாவது தமிழ்நாட்டுக்கு பாஜக அரசு கொண்டு வந்ததாகப் பட்டியல் போட முடியுமா? ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை 2015-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 2019-ம் ஆண்டு பிரதமர் மோடியால் ஒரு செங்கல் வைக்கப்பட்டது. மறு செங்கல் இதுவரை வைக்கப்படவில்லை. 2024 மே மாதத்துக்குப் பிறகு பதவியேற்கும் புதிய பிரதமர்தான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டப் போகிறார். வீட்டில் இருந்தபடி மோடி அதனைப் பார்க்கப் போகிறார். மதுரையில் ஒரே ஒரு எய்ம்ஸ் கூட திறக்க முடியாத உங்களால் மதுரைக்கு எப்படி வரமுடிகிறது, கூச்சமாக இல்லையா?

பிரதமர் மோடி

பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒரு பைசாவைக்கூடத் தமிழ்நாட்டிற்குத் தரவில்லை. வெள்ளம் பாதித்த தூத்துக்குடிக்கும் திருநெல்வேலிக்கும் வெறும் கையோடு வந்து முழம் போடுகிறார்கள். வெள்ளம் பாதித்த பகுதியை மேம்படுத்த 37 ஆயிரம் கோடி நிதி கேட்டோம். அதில் கொஞ்சம் கூட தரவில்லை. தர மறுத்த நீங்கள் அது பற்றிய கூச்சமே இல்லாமல் தூத்துக்குடிக்கும் திருநெல்வேலிக்கும் எப்படி வருகிறீர்கள்?

'தமிழ்நாட்டைச் சேர்ந்த முருகனை ஒன்றிய அமைச்சராக்கி உள்ளோம்' எனப் பெருமைப்பட்டிருக்கிறார் பிரதமர் மோடி. காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருந்தபோது தமிழ்நாட்டைச் சேர்ந்த நான், தயாநிதி மாறன், ஆ.இராசா, மு.க. அழகிரி, ப.சிதம்பரம், அன்புமணி, பழனிமாணிக்கம், ஜி.கே.வாசன், நெப்போலியன், மணிசங்கர் அய்யர், அர.வேலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், வேங்கடபதி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ரகுபதி என எவ்வளவு பேர் அமைச்சர்களாக இருந்தார்கள் என எண்ணிப் பாருங்கள். இணை அமைச்சர் பொறுப்பில் முருகனை நியமித்துவிட்டு, பெருமை அடிக்காதீர்கள்.

'திமுகவை இனிப் பார்க்க முடியாது. இனி திமுக எங்கு தேடினாலும் கிடைக்காது' எனச் சொல்லியிருக்கிறார் பிரதமர் மோடி. 'திமுக அழிந்து போகும். தலைதூக்காது' என திமுக உருவான 1949-ம் ஆண்டில் இருந்து இன்று வரை 74 ஆண்டு காலமாகப் பலர் பேசிக் கடந்து சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், திமுக என்ற இமயமலை இன்றும் வரலாற்றில் நிமிர்ந்து நின்று கொண்டுதான் இருக்கிறது.

திமுகவையே இல்லாமல் ஆக்கிவிடுவாராம். சவால் விட்டுள்ளார். இப்படிச் சொன்னவர்கள் எல்லாம் வரலாற்றில் காணாமல் போய்விட்டார்கள். அந்த வரிசையில் அவரும் விரைவில் இணைந்துவிடத்தான் போகிறார் என்று எச்சரிக்கிறேன்" என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

x