காஷ்மீரில் ராகுல் பரபரப்பு பேச்சு முதல் மாரியப்பன் சாதனை வரை: டாப் 10 விரைவுச் செய்திகள்  


ஜம்மு காஷ்மீரில் ராகுல் காந்தி பேச்சு: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அனந்தநாக்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, "கடந்த மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடியை உளவியல் ரீதியாக தோற்கடித்துள்ளோம். இண்டியா கூட்டணி அவருக்கு முன் நின்றது. அதன் காரணமாக அவரது முழு நம்பிக்கையும் மறைந்துவிட்டது. இப்போது நரேந்திர மோடி, இந்திய மக்களைப் பார்த்து பயப்படுகிறார். காங்கிரஸ் கட்சி, பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றும் காலம் வெகுதொலைவில் இல்லை” என தெரிவித்தார்.

மேலும், “நான் உங்களுக்கு உத்தரவாதம் தருகிறேன். பாஜக அரசு நிச்சயம் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை வழங்கும். அப்படி வழங்காவிட்டால், இண்டியா கூட்டணி அரசு வந்தவுடன் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதே அதன் முதல் பணியாக இருக்கும்” என்று அவர் பேசியது கவனம் ஈர்த்துள்ளது.

பருவமழை முன்னெச்சரிக்கை: உதயநிதி அறிவுறுத்தல்: “சென்னை மாநகரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்,” என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் உதயநிதி அறிவுறுத்தியுள்ளார்.

டெங்கு பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை: அமைச்சர்: அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "உலகத்தின் 80 சதவீத நாடுகளில் டெங்கு பாதிப்பு அதிகரித்தது. ஆனால், தமிழ்நாடு அரசின் தீவிர முயற்சி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட 3 துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு டெங்கு பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் வரலாற்றிலேயே முதல்முறையாக டெங்கு பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

35 மீனவர்களுக்கு இலங்கையில் காவல் நீட்டிப்பு: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் 35 பேருக்கு செப்டம்பர் 11ம் தேதி வரையிலும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே, தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என அகில இந்திய மீனவர் காங்கிரஸின் தேசிய தலைவர் எஸ். ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.

‘தி கோட்’ சிறப்புக் காட்சிகளுக்கு ஒருநாள் மட்டும் அனுமதி: விஜய்யின் ‘தி கோட்’ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், “ஏஜிஎஸ் என்டர்டெயின்ட்மென்ட் தயாரிப்பு நிறுவனம் சார்பில், ‘தி கோட்’ திரைப்படத்துக்கு தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் செப்டம்பர் 5 மற்றும் 6 ஆகிய இரண்டு நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளை திரையிட அனுமதி கோரப்பட்டது. அதன் அடிப்படையில், செப்டம்பர் 5-ம் தேதி ஒரு நாள் மட்டும், ஒரு சிறப்புக் காட்சியை தமிழகத்தில் திரையிட அனுமதி அளிக்கப்படுகிறது. முறையான பாதுகாப்பு வசதிகளுடன் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி இறுதி காட்சி இரவு 2 மணி வரை (மொத்தம் 5 காட்சிகள்) திரையிடலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவடி கனரக ஊர்தி ஆலை வேலைகள்: ராமதாஸ் கேள்வி: ஆவடி கனரக ஊர்தி ஆலை வேலைகளை வெளி மாநிலத்தவருக்கு தாரை வார்ப்பதா? மத்திய அரசுத் துறைகளும், நிறுவனங்களும் மாநில இட ஒதுக்கீட்டை வழங்க மறுப்பதற்கு காரணம், மாநில ஒதுக்கீடு என்பது வழிகாட்டுதலாக இருக்கிறதே தவிர, கட்டாயமாகவும், சட்டமாகவும் இல்லாதது தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்..

ராகுலுடன் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா சந்திப்பு: ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 5-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகிய இருவரும் காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்படலாம் என ஊகங்கள் வெளியாகின. எனினும், இது குறித்து காங்கிரஸ் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளரும், ஹரியாணா பொறுப்பாளருமான தீபக் பபாரியாவிடம் இது குறித்து கேட்டபோது, செப்டம்பர் 5ம் தேதி இது குறித்து தெளிவுபடுத்தப்படும் என்று பதிலளித்தார். இந்நிலையில், காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோருடன் ராகுல் காந்தி இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மீது கார்கே குற்றச்சாட்டு: மணிப்பூர் மக்களை பாதுகாப்பதில் பிரதமர் நரேந்திர மோடி, மோசமாக தோல்வி அடைந்துவிட்டார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

“புருனே பயணம் பயனுள்ளதாக இருந்தது” - பிரதமர் மோடி: புருனே சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியா உடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணம் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

மாரியப்பனுக்கு குவியும் பாராட்டுகள்! - பாராலிம்பிக்ஸ் தொடரின் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தொடர்ந்து மூன்று பாராலிம்பிக்ஸ் தொடரில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 2016-ம் ஆண்டு பாராலிம்பிக் தொடரில் மாரியப்பன் தங்கப் பதக்கமும், 2020 டோக்யோ பாராலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கமும் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.

இதனிடையே, பாராலிம்பிக்ஸ் தொடரில் ஆண்களுக்கான குண்டு எறிதல் F46 பிரிவின் இறுதிப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்தியாவின் சச்சின் சர்ஜேராவ் கிலாரி 16.32 மீட்டர் தூரம் குண்டு வீசி 2-ம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியா மொத்தம் 21 பதக்கங்களை பாராலிம்பிக்ஸில் இதுவரை வென்றுள்ளது. 3 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 21 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

x