குரோம்பேட்டையில் ரூ.43.74 கோடியில் சுரங்கப்பாதை பணிகள்: உதயநிதி திடீர் ஆய்வு


குரோம்பேட்டை சுரங்கப்பாதை பணிகளை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். படம், எம். முத்துகணேஷ்.

குரோம்பேட்டை: குரோம்பேட்டையில் கடந்த 10 ஆண்டுகளாக ரூ.43.74 கோடியில் நடைபெறும் சுரங்கப் பாதை பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

குரோம்பேட்டை ராதா நகர் ரயில்வே கேட் எல்.சி.,-27 அமைந்துள்ள பகுதியில் சுரங்கப் பாதை 2007ம் ஆண்டு பணிகள் தொடங்கின. ரயில்வே பகுதியில் பணிகள் முடிந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் ஆட்சி மாற்றம் காரணமாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டன.

இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதத்தில், சுரங்கப் பாதை திட்டத்திற்கான பணிகளை தொடங்க ஏதுவாக, 46 கட்டடங்கள் இடிக்கப்பட்டன. தொடர்ந்து ரூ.15.47 கோடி டெண்டர் விடப்பட்டு, நெடுஞ்சாலைத் துறை பணிகள் தொடங்கின. தண்டவாளத்தின் கிழக்கு பகுதியில் பெரும்பாலான பணிகள் முடிந்த நிலையில், மேற்கு பகுதியில் பணிகளை தொடங்க 2022ம் ஆண்டு ஜூன் மாதம் தடையில்லா சான்று கிடைத்ததை அடுத்து, மேற்கு பகுதியில் பணிகள் தொடங்கின.

இதனிடையே சுரங்கப் பாதையின் நடுவில் 612 அடி தூரத்திற்கு ரயில்வே கம்யூனிகேஷன் கேபில் செல்கிறது. அதை அகற்ற, நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.11.42 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது. இப்பணி விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. மொத்தம் 75 சதவீத பணிகள் முடிந்துள்ளது.

இந்நிலையில் சுரங்கப் பாதை பணியை அமைச்சர் உதயநிதி இன்று மாலை ஆய்வு செய்தார். அப்போது திட்டம் குறித்தும் பணியின் தற்போதைய நிலைமை குறித்தும் அதிகாரிகள் விளக்கினர். இந்த ஆய்வின் போது அமைச்சர் அன்பரசன், ஆட்சியர் ச. அருண்ராஜ், மாநகராட்சி ஆணையர் பாலசந்தர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

x