காமராஜர் பல்கலை.யில் சம்பளம் கேட்டு பதிவாளர் அறையில் திரண்டு பேராசிரியர்கள் போராட்டம்


மதுரை: காமராஜர் பல்கலைக்கழகத்தில் சம்பளம் கேட்டு பதிவாளர் அறையின் முன்பு திரண்டு பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் பல்கலைக்கழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழத்தில் தொடர்ந்து நிதி நெருக்கடி என்பது தீர்க்க முடியாத பிரச்சினையாகவே உள்ளது. மாதந் தோறும் பேராசிரியர்கள், ஊழியர்கள் சம்பளம் மற்றும் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவதில் சிக்கல் தொடர்கிறது. ஒவ்வொரு மாதமும் ரூ.10.50 கோடி தேவை என்ற அடிப்படையில், இந்த நிதியை திரட்டுவதில் பல்கலை நிர்வாகமும் திணறுகிறது. கடந்த ஜூலை, ஆகஸ்டு மாதத்திற்கான சம்பளம், ஓய்வூதியம் வழங்குவதில் நிதி பற்றாக்குறையால் இதுவரை வழங்க முடியாத சூழல் உள்ளது.

இதன் காரணமாக பல்கலைக்கழக பேராசிரியர்கள், அலுவலர்கள், ஓய்வூதியர்கள் கடும் நிதி நெருக்கடி சந்திக்கின்றனர். இந்த நிலையில், பணி முடிந்து மாலை 5 மணிக்கு மேல் பல்கலைக்கழக பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் உள்ளிட்டோர் நிலுவை சம்பளத்தை வழங்க வலியுறுத்தி பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகம் முன்பு திரண்டனர். உடனே சம்பளம் வழங்க வலியுறுத்தினர். வேறு வழியின்றி பதிவாளர் அலுவலக அறைக்கு முன்பாக நீண்ட வரிசையில் அமர்ந்தனர்.

நாகமலை புதுக்கோட்டை போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு நடத்தினர். சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு அவர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும், மீண்டும் பதிவாளர் அறையின் முன்பு இன்று போராட்டம் செய்வோம் என கூறிவிட்டு சென்றதாக கூறுப்படுகிறது. இவர்களை தொடர்ந்து பல்கலைக்கழக அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களும் போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறியுள்ளனர்.

x