செப்டம்பர் 10-ல் வேலை நிறுத்தப் போராட்டம்: டிட்டோ-ஜாக் கூட்டமைப்பு முக்கிய முடிவு


தென்காசி: செப்டம்பர் 10-ல் வேலை நிறுத்தத்தை வலிமையாக நடத்த டிட்டோ-ஜாக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ-ஜாக்) மாநில மைய முடிவின்படி செப்டம்பர் 10-ம் தேதி நடைபெறும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை வலிமையாக நடத்துவது குறித்து தென்காசி மாவட்ட டிட்டோ- ஜாக் சார்பில் ஆயத்த மாநாடு தென்காசியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர்கள் செய்யது இப்ராஹிம் மூசா, மாரிமுத்து, கனகராஜ் தலைமை வகித்தனர். ஆரோக்கியராசு வரவேற்று பேசினார்.

டிட்டோ-ஜாக் கூட்டமைப்பு சார்பில் நடைபெற உள்ள ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் மற்றும் செப்டம்பர் 29, 30, அக்டோபர் 1-ல் சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டங்களை வெற்றிகரமாக நடத்துவது குறித்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பேசினர்.

மாநாட்டில், 'அடையாள வேலைநிறுத்தம் மற்றும் கோட்டை முற்றுகை போராட்டத்தை வலிமையாக நடத்தும் வகையில் வட்டார அளவில் வட்டார டிட்டோ-ஜாக் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடத்துவது. பள்ளிகள் தோறும் சென்று ஆசிரியர்கள் சந்திப்பு இயக்கம் நடத்தி போராட்டத்தை வலுப்படுத்துவது. செப்டம்பர் 10-ல் நடைபெறும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை முழுமையாக நடத்த களப்பணியாற்றுவது' என முடிவு செய்யப்பட்டது.

x