காட்பாடியில் திமுகவினர் வைத்த விளம்பர வளைவுகளால் நெரிசல்!


காட்பாடி விருதம்பட்டு பகுதி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கட்டப்பட்டுள்ள விளம்பர வளைவுகள். | படங்கள்: வி.எம்.மணிநாதன் |

வேலூர்: காட்பாடியில் பொன்னை உயர்மட்ட பாலம் திறப்பு விழாவுக்காக திமுகவினர் வைத்த விளம்பர வளைவுகளால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதாக வாகன ஓட்டிகள் புலம்பி வருகின்றனர். பொன்னையில் நடைபெற்ற விழாவுக்கு ஏன்? காட்பாடியில் விளம்பர வளைவுகள் வைத்து நெரிசலை ஏற்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் செல்லும் சரக்கு வாகனங்கள் அனைத்தும் வேலூர் வழியாக காட்பாடி செல்கிறது. மாநிலங்களுக்கு இடையிலான கண்டெய்னர் முதல் பல வகையான சரக்கு வாக னங்கள் அனைத்தும் வேலூர் -காட்பாடி வழியாகச் செல்வதால் எப்போதும் வாகன நெரிசல் ஏற்படுகிறது.

மேலும், வேலூரின் பிரபலமான பள்ளிகள் அனைத்தும் காட்பாடி பகுதியில் உள்ளன. அந்த பள்ளிகளின் பேருந்துகள் அதிகம் இயக்கப்படுவதால் காலை மற்றும் மாலை நேரங்களில் மூச்சு முட்டும் அளவுக்கு வாகன நெரிசல் ஏற்படுகிறது.

அதேபோல், காட்பாடி பகுதியில் நாளுக்கு நாள் பிரபல நிறுவ னங்களின் சங்கிலி தொடர் கிளைகள் அதிகம் தொடங்கப்படுவதால், வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. காட் பாடியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் வேலூர் மற்றும் காட்பாடிக்கு இரு சக்கர வாகனங்களில் அதிகம் வந்து செல்வது போன்ற பல்வேறு காரணங்களால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனை கையாள முடியாமல் காட்பாடி போக்குவரத்து காவல் துறையினர் திணறி வருகின்றனர்.

இதற்கிடையில், காட்பாடி அடுத்த பொன்னையில் உயர் மட்ட பாலம் திறப்பு விழா கடந்த வாரம் நடைபெற்றது. இதில், நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தம் அருகே கட்டப்பட்டுள்ள விளம்பர வளைவுகள்.

இந்த விழாவுக்காக அமைச்சர்களை வரவேற்கும் விதமாக காட்பாடி விருதம்பட்டு, ஓடை பிள்ளையார் கோயில் அருகில், தாராபடவேடு உள்ளிட்ட பகுதிகளில் திமுவினர் சவுக்கு கழிகளால் ஆன உயரமான விளம்பர வளைவுகளை அமைத் தனர். இந்த வளைவுகளால் சாலை சுருங்கி வாகனங்கள் செல்வதற்கு சிரமமாக மாறியது. ஏற்கெனவே, வாகன நெரிசலில் திணறும் காட்பாடியில் இவர்களது விளம்பர வளைவுகள் வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் சிரமத்தை கொடுத்தது.

மக்கள் அதிருப்தி... விழா முடிந்ததும் விளம்பர வளைவுகள் அகற்றி விடுவார்கள் என எதிர்பார்த்த நிலையில் செவ் வாய்க்கிழமையான நேற்றும் அகற்றப்படாமல் இருந்தது. அதிலிருந்த விளம்பர போஸ்டர்கள் அகற்றிய நிலையில் வளைவுகள் மட்டும் அப்படியே உள்ளது. இது திமுகவினர் மீது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படு்த்தியுள்ளது.

காட்பாடியின் ஒரு மூலையில் உள்ள பொன்னையில் நடைபெறும் பாலம் திறப்பு விழாவுக்கு ஏன்? காட்பாடியில் விளம்பர வளைவு வைத்து நெரிசலை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

பொன்னை பாலம் திறப்பு விழாவில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ‘‘காட்பாடி சாலை தினசரி போக்குவரத்து நெரிசலால் திணறி வருவதால் காட்பாடி ரயில் நிலையம் பகுதியில் இரண்டாவது மேம்பாலம் விரைந்து கட்ட நடவடிக்கை எடுத்தால், இதைவிட பிரம்மாண்ட விழா எடுக்கப்படும்’ என பொதுப்பணித்துறை அமைச் சருக்கு கோரிக்கை வைத்தார்.

ஆனால், கடந்த மூன்று நாட்களாக காட்பாடி பகுதியில் ஏற்பட்டு வரும் நெரிசலுக்கு திமுக வினரே காரணம் என பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.

இதுதொடர்பாக திமுக நிர்வாகிகள் தரப்பில் விசாரித்த போது, ‘‘விழா முடிந்ததும் அந்த வளைவுகளை அகற்ற கூறி விட்டோம். பகல் நேரத்தில் விளம்பர வளைவுகள் அகற்றும் பணியை செய்தால் நெரிசல் ஏற்படும் என்பதால், இரவு நேரத்தில் அகற்ற கூறியுள்ளோம். இன்று (நேற்று) இரவு அகற்றி விடுவார்கள்’’ என்றனர்.

x