உயிர் பலி வாங்கும் குவாரி பள்ளங்கள்: வேலி அமைக்க மதுரை மக்கள் வலியுறுத்தல்


மதுரை: மதுரையில் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்ட பிறகு மூடப்படாமல் விடப்பட்ட குவாரி பள்ளங்களில் உயிர்பலிகள் ஏற்படாமல் இருக்க அவைகளில் வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மதுரையில் சில ஆண்டுகளுக்கு முன்பு குவாரி தொழில் கொடிகட்டி பறந்தது. மதுரை மாவட்டத்தில் குறிப்பாக, மதுரை கிழக்கு, மேலூர் பகுதிகளில் கிரானைட் குவாரி நடத்த தாராள அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகளில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டதால் குவாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து கிரானைட் எடுக்கப்பட்ட குவாரி பள்ளங்கள் மூடப்படாமல் அப்படியே விடப்பட்டன. அந்தக் குவாரி பள்ளங்களில் மழை நீர் நிரம்பி குளம் போல் காட்சியளிக்கின்றன. உள்ளூர் மக்கள் குவாரி குளங்களில் குளித்து வருகின்றனர்.

இந்தக் குவாரி பள்ளங்கள் சமீப காலங்களில் உயிர்பலி வாங்கும் பள்ளங்களாக மாறிவருகின்றன. மதுரை ஒத்தக்கடை அருகே நரசிங்கம் கோயில் அருகேயும், மஸ்தான்பட்டி பாண்டியன்கோட்டை பகுதியிலுள்ள நூறு அடிக்கும் மேல் ஆழம் கொண்ட ராட்சத குவாரி பள்ளங்கள் உள்ளன. கோடை விடுமுறையை ஒட்டி சிறுவர்கள் அதிகளவில் குவாரி பள்ளங்களில் குளித்து வருகின்றனர். பள்ளங்களின் ஆழம் தெரியாமல் குளிக்கும் சிறுவர்கள் சிலர் உயிரிழக்கின்றனர்.

மதுரை ஒத்தக்கடை நரசிங்கம் குவாரி பள்ளத்தில் ஒரு பகுதியில் தண்ணீர் நிரம்பியும், மற்றொரு பகுதி ஆகாய தாமரை செடி மூடியும் காணப்படுகிறது.

நரசிங்கம் குவாரி பள்ளத்தில் கடந்தாண்டு திண்டுக்கல் மாவட்டம் சிறுவாத்தூர் கிராமத்தை 3 பேர் விழுந்து உயிரிழந்தனர். அப்போதே குவாரி பள்ளங்களை சுற்றி வேலி அமைக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் தற்போது வரை வேலி அமைக்கப்படவில்லை. தற்போது குவாரி பள்ளங்களில் ஆகாயத் தாமரை படர்ந்துள்ளது. இதனால் பார்க்கும் போது குவாரி பள்ளம் பசுமையான தரை போல் தெரிகிறது.

இது தெரியாமலும் பலர் குவாரி பள்ளத்தில் தவறி விழுகின்றனர். இதனால் குவாரி பள்ளங்களை மூட வேண்டும், இல்லாவிட்டால் குவாரி பள்ளங்களை சுற்றி வேலி அமைத்து ஆட்கள் செல்ல முடியாத அளவுக்கு எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து குவாரி பள்ளங்கள் இருக்கும் பகுதிகளில் வசிப்பவர்கள் கூறுகையில், ''குவாரி பள்ளங்களில் சிறுவர்கள் அதிகளவில் குளிக்கச் செல்கின்றனர். அவர்களுக்கு குவாரி பள்ளத்தின் உண்மையான ஆழம் தெரிவதில்லை. இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. குவாரி பள்ளம் அருகே செல்லாமல் இருக்க சிறுவர்களை 24 மணி நேரமும் கண்காணித்து கொண்டிருக்க வேண்டியதுள்ளது. இதனால் குவாரி பள்ளத்தை சுற்றி வேலி அமைக்க வேண்டும்'' என்றனர்.