நித்தியானந்தா வந்து உண்மையை சொல்லவேண்டும்: வழக்கை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்!


சென்னை: நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள மடங்களுக்கு தக்கார் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து நித்யானந்தா சார்பில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருவாரூர் ஸ்ரீ சோமநாத சுவாமி மடம், வேதாரண்யம் ஸ்ரீ போ.கா.சாதுக்கள் மடம், பஞ்சநதிகுளம் ஸ்ரீ அருணாச்சல ஞானதேசிக மடம், திருவாரூர் ஸ்ரீ பால்சாமி, சங்கரசாமி மடம் ஆகிய பல மடங்களின் மடாதிபதியாக நித்யானந்தாவை ஏற்கனவே இருந்த மடாதிபதி ஆத்மானந்தா நியமித்திருந்தார். இந்த நான்கு மடங்களையும் நிர்வகிக்க, தக்கார் நியமித்து தமிழக இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள மடங்களுக்கு தக்கார் நியமன நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கக் கோரி, பெண் சீடர் நித்யா கோபிகா ஆனந்த் என்ற உமாதேவி என்பவருக்கு பொது அதிகாரம் வழங்கி நித்யானந்தா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 2017ல் தொடர்ந்த இந்த வழக்கு இன்று நீதிபதி தண்டபாணி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, “மடங்களை நிர்வகிக்க தக்காரை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது. வழக்கை தொடர உமாதேவி என்ற சீடருக்கு பவர் ஆப் அட்டார்னியை நித்யானந்தா கொடுத்துள்ளார். உண்மையிலேயே பவர் ஆப் அட்டார்னியை நித்யானந்தா கொடுத்தாரா என நீதிமன்றம் அறிய விரும்புகிறது. நித்யானந்தா எங்கு இருக்கிறார் என தெரிய வேண்டும். ஆகவே, நித்யானந்தா நேரில் ஆஜராகி பவர் ஆப் அட்டார்னி கொடுத்தது உண்மைதான் என தெரிவிக்க வேண்டும். நேரில் ஆஜராக முடியவில்லை என்றால் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜராகலாம்”எனத் தெரிவித்தனர். ஆனால் நித்யானந்தா காணொளி மூலம் ஆஜராக இயலாது என மனுதாரர் தெரிவித்ததால் நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

x