அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் சோதனை... லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!


தனது கணவருடன் சத்யா பன்னீர்செல்வம்

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா சத்யா பன்னீர் செல்வத்தின் வீடு உள்ளிட்ட இடங்களில் இன்று அதிகாலை முதல் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பண்ருட்டி தொகுதி முன்னாள் எம்எல்ஏவாக இருந்தவர் சத்யா பன்னீர்செல்வம். கடந்த 2021 ம் ஆண்டு தலைமைக்கு எதிராக செயல்பட்டவர்கள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு சென்று வந்தவர்கள் என பலரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட போது அதிமுக மகளிர் அணி துணை செயலாளராக இருந்த சத்யா பன்னீர்செல்வமும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து சத்யா பன்னீர் செல்வமும், அவரது கணவரும் அரசியலை விட்டே விலகப் போவதாக அறிவித்திருந்தனர். ஆனாலும் நாளடைவில் மீண்டும் கட்சிப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தனர். இந்நிலையில் அவர்களது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

சத்யா பன்னீர்செல்வம்

கடந்த 2011 முதல் 2016 வரை சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம் பண்ருட்டி நகராட்சித் தலைவராக செயல்பட்டு வந்தார். அப்போது இருசக்கர வாகன நிறுத்துமிடம் டெண்டரில் ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக பன்னீர்செல்வம், முன்னாள் பண்ருட்டி நகராட்சி ஆணையர் பெருமாள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

20 லட்சம் டெண்டர் மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவான நிலையில் இன்று காலை முதல் அவருக்கு தொடர்புடைய இடங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். பண்ருட்டியில் உள்ள அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வத்தின் வீடு உட்பட 4 இடங்கள், சென்னையில் உள்ள முன்னாள் நகராட்சி ஆணையர் பெருமாளின் இடம் என மொத்தம் 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

x