எங்கு சென்றாலும் ராமரையும் ராமராஜ்யம் குறித்தும் பேசும் பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் அது குறித்து பேசாமல் எம்ஜிஆரை புகழ்ந்து பேசி உள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அயோத்தியில் பிரம்மாண்டமான முறையில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. அதன் முழு பெருமையையும் தனக்கு உரிமையாக்கி கொண்டுள்ள பிரதமர் மோடி, எங்கு சென்றாலும் ராமர், ராமராஜ்ஜியம் ஆகியவை குறித்து பேசத் தவறுவதில்லை.
இந்து மக்களின் வாக்குகளை முழுவதுமாக பெற்றிடும் வகையில் பிரதமர் மோடி நடந்து வருகிறார். அண்மையில் குஜராத் சென்றிருந்த அவர் கடலில் மூழ்கியுள்ள துவாரகா புராதன நகரை நீருக்கடியில் சென்று வணங்கி வந்தார்.
இந்நிலையில் தமிழ்நாட்டுக்கு நேற்று வந்திருந்த பிரதமர் மோடி, ராமர் குறித்து எதுவும் பேசாமல் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் குறித்து பேசி உள்ளார். தமிழ்நாட்டில் எம்.ஜி.ராமச்சந்திரன் பற்றி பேசினால் தான் எடுபடும் என்பது மோடிக்கு தெரிந்திருக்கிறது என்கிறார்கள்.
பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் பாஜக பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டையும், தமிழ் மொழியையும் வெகுவாக புகழ்ந்தார். "என்னை மிகவும் கவர்ந்த மொழி தமிழ். தமிழகத்திலிருந்து கொண்டு வரப்பட்ட செங்கோல், நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ளது. வாரணாசியில் காசி தமிழ் சங்கம் நடைபெற்றது.
தமிழ்நாடு மக்கள் இதயத்தால் சுத்தமானவர்கள், புத்திசாலிகள். தமிழ்நாட்டில் ஆட்சியில் இல்லாத போதும், தமிழ்நாட்டை தன் இதயத்தில் வைத்துள்ளது பாஜக. இன்று தமிழ்நாடு வந்துள்ள நான் எம்.ஜி.ஆரை நினைத்துப் பார்க்கிறேன். எம்.ஜி.ஆர் ஏழைகளுக்கு செய்த உதவியால் இன்னும் நினைவில் இருக்கிறார்.
எம்.ஜி.ஆர் குடும்ப ஆட்சி செய்யவில்லை, அவருக்குப் பிறகு தமிழ்நாட்டில் நல்ல ஆட்சியை கொடுத்தது ஜெயலலிதா மட்டுமே" என்று எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசினார். தமிழகத்தில் ராமரை புகழ்ந்து வாக்கு பெற முடியாததால் எம்.ஜி. ராமச்சந்திரனை போற்றி வாக்குகளை பெற முயற்சிக்கிறார் என்று இதற்கு எதிர் விமர்சனங்கள் எழுந்துள்ளன. பத்திரிகையாளர் ஷ்யாம், மோடியா லேடியா என்று சவால் விட்ட ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லி மோடி வாக்கு கேட்பதற்கு அவர் வெட்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
இதையும் வாசிக்கலாமே...
“28 பைசா மோடி...” தெறிக்கவிடும் உதயநிதி ஸ்டாலின்!
குட் நியூஸ்... புற்றுநோயை குணப்படுத்த மாத்திரை போதும்... டாடா இன்ஸ்டிட்யூட் சாதனை!