கல்லல் அருகே வடமஞ்சுவிரட்டில் 15 காளைகள், 135 வீரர்கள் பங்கேற்பு


நாவல்கனியன் மடத்தில் நடைபெற்ற வடமஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளை.

காரைக்குடி: கல்லல் அருகே வடமஞ்சுவிரட்டில் 15 காளைகளை அடக்க 135 மாடுபிடிவீரர்கள் களமிறங்கினர்

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே அ.கருங்குளம் ஊராட்சி நாவல்கனியன் மடம் கிராமத்தில் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி இன்று வடமஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 15 காளைகள் பங்கேற்றன.

நாவல்கனியன் மடத்தில் நடைபெற்ற வடமஞ்சுவிரட்டில் காளையை அடக்க முயன்ற வீரர்கள்.

மேலும் ஒரு காளையை அடக்க 9 பேர் வீதம் மொத்தம் 135 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். ஒரு காளையை அடக்க 25 நிமிடங்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் தொடங்கி வைத்தார். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு, ரொக்கம் வழங்கப்பட்டன.

மாடுகள் முட்டியதில் 2 பேர் காயமடைந்தனர். நாவல்கனியன் மடம், கல்லல், கருங்குளம், காளையார்கோவில், வெற்றியூர், அரண்மனைசிறுவயல் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

x