மடகாஸ்கரில் மதிமுகவினருக்கு வேலைவாய்ப்பு: துரை வைகோ தகவல் 


சென்னை: மடகாஸ்கரில் மதிமுகவினருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலான வேலைவாய்ப்பை ஏற்பாடு செய்திருப்பதாக அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சமூகவலைதள பக்கங்களில் கூறியிருப்பதாவது: ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மடகாஸ்கரில் விவசாயம் சார்ந்து இயங்கி வரும் ஒரு நிறுவனம் வேலைவாய்ப்புகளுக்காக தகுதியான நபர்களை நியமிக்க உள்ளது. அதன்படி, கனரக டிரக் மெக்கானிக் பணிக்கு டிப்ளமா அல்லது ஐடிஐ படித்திருக்க வேண்டும். தேர்வாகும் நபருக்கு 900+100 அமெரிக்க டாலர் ஊதியமாக வழங்கப்படும். உணவு, இருப்பிடம், விமான டிக்கெட் நிறுவனத்தின் பொறுப்பு. கார் மெக்கானிக் பணிக்கும் மேற்கூறிய கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊதியமாக 800+100 அமெரிக்க டாலர் வழங்கப்படும். உணவு , இருப்பிடம், விமான டிக்கெட் நிறுவனத்தின் பொறுப்பு.

நிலத்தின் பொறுப்பாளர் பணிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் விவசாயம் குறித்து தெரிந்திருக்க வேண்டும். ஊதியமாக 600 +100 அமெரிக்க டாலர் வழங்கப்படும். தங்குமிடத்துக்கான தொகை, விமான டிக்கெட் வழங்கப்படும். நேர்காணல், மற்ற நடைமுறைகள் முடிந்த பின் விசா, டிக்கெட் வழங்கப்படும். இந்த நல்லதொரு வேலை வாய்ப்பை மதிமுக நிர்வாகிகளுக்கோ அல்லது அவர்களது குடும்பத்தினருக்கோ வாங்கித் தர வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன்.

இந்த வேலைவாய்ப்பின் மூலமாக மதிமுக குடும்பங்கள் பொருளாதார அடிப்படையில் பயனடைந்தால் அதை விட வேறு மகிழ்ச்சி இல்லை. இந்த மூன்று பணியிடங்களுக்கு விண்ணிப்பிப்பவர்களுக்கு ஆங்கிலம் பேச, புரிந்து கொள்ள தெரிந்து இருக்க வேண்டும். மதிமுக நிர்வாகிகள் குடும்பத்தினருக்கு மட்டுமே முன்னுரிமை. விண்ணப்பத்தை கட்சியின் இளைஞரணி செயலாளர் மின்னஞ்சல் (asaithambi.thanaiyan@gmail.com, mdmksw@gmail.com) அல்லது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு (9789983907) அனுப்பலாம்.'' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x