காங்கிரசுக்கு 5 தொகுதி ஒதுக்கும் திமுக... 15 தொகுதி ஆஃபர் கொடுக்கும் அதிமுக!


சோனியா ராகுல் பிரியங்கா

காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க திமுக சம்மதித்ததாக நேற்று தகவல் வெளியானது. ஆனால், காங்கிரசுக்கு 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக திட்டவட்டமாக தெரிவித்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

திமுக உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் எதிர்பார்த்த முன்னேற்றம் எட்டப்படாததால் நேற்று அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை. ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதை தடுக்காத மத்திய அரசைக் கண்டித்து இன்று ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தார் பெருந்தகை. அதைக்கூட ரத்து செய்துவிட்டு அவர் டெல்லிக்கு விரைந்ததன் பின்னணியில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இது தொடர்பாக காங்கிரஸ் தரப்பிலிருந்து நம்மிடம் பேசியவர்கள், “மற்ற மாநிலங்களில் இந்தியா கூட்டணியில் இருக்கும் கட்சிகள் காங்கிரஸ் கட்சியை உதாசீனம் செய்தாலும் தமிழகத்தில் காங்கிரசுக்கு உரிய மரியாதையை திமுக கொடுக்கும் என பெரிதும் நம்பினோம். ஆனால், பிற மாநிலங்களைக் காரணம் காட்டி திமுகவும் காங்கிரசை போட்டுப் பார்க்கிறது. அதனால் தான் இம்முறை காங்கிரசுக்கு 5 தொகுதிகளை மட்டுமே தரமுடியும் என்றது திமுக. தொட்டகமே இப்படிச் சொன்னதால் அடுத்துப் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்பதால் செல்வப்பெருந்தகை டெல்லி சென்றிருக்கிறார்” என்றார்கள்.

செல்வப்பெருந்தகை

திமுக தரப்பில் இழுத்தடிக்கிறார்கள் என்றதுமே காங்கிரஸ் கட்சியின் ஆந்திர மாநில முன்னாள் காங்கிரஸ் எம்பி ஒருவர் மூலமாக அதிமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியதாகச் சொல்லப்படுகிறது. தங்கள் பக்கம் வந்தால் 15 தொகுதிகள் வரை காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்க தயாராக இருப்பதாக அதிமுக தரப்பில் இனிப்பான செய்தியைச் சொல்லி இருக்கிறார்கள்.

இந்தத் தகவலும் டெல்லி தலைமைக்கு தெரிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், “அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். திமுகவுடன் பேசுவதற்கு இன்னும் அவகாசம் இருக்கிறது” என்று சொல்லியதாம் காங்கிரஸ் தலைமை. இதையடுத்தே டெல்லிக்கு விரைந்திருக்கிறார் செல்வப்பெருந்தகை.

ஸ்டாலின்

இப்போதைய நிலையில், கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, சசிகாந்த் செந்தில், மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த் ஆகிய ஐவருக்கு மட்டுமே சீட் ஒதுக்கும் வகையில் தொகுதிகளை ஒதுக்கி இருக்கிறதாம் திமுக. கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் கேட்ட போது, “ஒவ்வொரு ஊரிலும் காங்கிரஸ் இரண்டு கோஷ்டிகளாக இருக்கிறார்கள். கட்சியை இப்படி வைத்துக்கொண்டு உங்களால் எப்படி ஜெயிக்க முடியும். இத்தகைய கோஷ்டி பூசலால் அந்தத் தொகுதிகளில் எதிர்க் கட்சிகள் வெற்றிபெற வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துவிடக் கூடாது என்று தான் அஞ்சுகிறோம்” என்றார்களாம் திமுக தரப்பில்.

இந்த நிலையில், இன்று காலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபாலை சந்தித்துவிட்டு வெளியே வந்த செல்வப் பெருந்தகை, “கடந்த முறை காங்கிரசுக்கு ஒதுக்கிய தொகுதிகளின் எண்ணிக்கையில் எதுவும் குறையாத வகையில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

ஆனால், திமுக கடந்த முறை காங்கிரசுக்கு ஒதுக்கிய எண்ணிக்கையில் இம்முறையும் தொகுதிகளை ஒதுக்கும் என்ற நம்பிக்கை இல்லை. 5 சீட்டில் பேச்சை தொடங்கி இருக்கும் திமுக அதிகபட்சம் போனால் 7 தொகுதிகளுக்கு மேல் காங்கிரசுக்கு ஒதுக்காது என்பதே திமுக மேல்மட்ட தலைவர்கள் தரப்பிலிருந்து கசியும் தகவல்!

x