சுதந்திர போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக சளி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருந்தால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் என்.சங்கரய்யா இன்று காலை காலமானார். அவரது உடலுக்கு முதல் ஆளாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’பொதுத் தொண்டே வாழ்க்கையென வாழ்ந்த இச்செஞ்சட்டைச் செம்மலுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மூலமாக மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும் என இந்த ஆண்டு ஜூலை 15 அன்று நான் அறிவிப்பு செய்திருந்தும், தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றை அறியாத குறுகிய மனம் படைத்த சிலரது சதியால் அது நடந்தேறாமல் போனதை எண்ணி இவ்வேளையில் மேலும் மனம் வருந்துகிறேன்.
விடுதலைப் போராட்ட வீரராக, சட்டமன்ற உறுப்பினராக, அரசியல் கட்சித் தலைவராக அவர் தமிழகத்திற்கு ஆற்றிய தொண்டினைப் போற்றும் விதமாக அவரது திருவுடல் அரசு மரியாதையுடன் பிரியாவிடை கொடுக்கப்படும்’’ என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
உஷார்; 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
மீண்டும் விலை உயரும் அபாயம்: தொடர்மழையால் செடியிலேயே அழுகும் தக்காளி!