சுதந்திரப்போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான என்.சங்கரய்யா சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 102.
கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தோழர் என்.எஸ் என்று அன்புடன் அழைக்கப்பட்ட என்.சங்கரய்யா கடந்த 1922 ஜூலை 15-ல் கோவில்பட்டியில் பிறந்தவர். அவரது இயற்பெயர் பிரதாப சந்திரன். அவரது பாட்டனார் எல்.சங்கரய்யா தன் பெயரைத்தான் வைக்க வேண்டும் என்று அடம்பிடித்து உண்ணாவிரதம் இருக்க, பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பிரதாப சந்திரனின் பெயர் அதன் பின் சங்கரய்யாவானது.
கோவில்பட்டியில் ஆரம்பிக்கல்வி கற்ற என்.சங்கரய்யா உயர் கல்வியை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தார். அப்போது மீனாட்சி அம்மன் கோயில் ஆலய நுழைவுப் போராட்டம் அவருக்குள் இருந்த போராட்ட உணர்வை கிளர்ந்தெழச் செய்தது.
1938-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று ராஜாஜிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டினார். பி.ஏ.இறுதித்தேர்வு எழுத வேண்டிய நிலையில் போராட்டத்தில் பங்கேற்று என்.சங்கரய்யா சிறை சென்றார். இதனால் அவரை வழக்கறிஞராக்க வேண்டும் என்ற அவரின் தந்தையின் எண்ணம் கனவாகிப் போனது.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்த என்.சங்கரய்யா, பரிமேலழகர் தமிழ்க் கழகத்தின் இணைச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த மன்றத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு ராஜாஜி, சத்தியமூர்த்தி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்ட பல தலைவர்களை அழைத்துவந்து பேச வைத்தார்.
மாணவப் பருவத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து பல போராட்டங்களிலும் பங்கேற்றார். மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்களில் சுதந்திரப் போராட்ட கனலைப் பரவச் செய்தவர் என்.சங்கரய்யா. ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின் போது நெல்லையில் பல்வேறு கல்லூரி மாணவர்களைத் திரட்டி ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிப் பேரணி நடத்தினார். அப்போது அவர் மீது கொடூரமான முறையில் தடியடி நடத்தப்பட்டது. இதில் படுகாயமடைந்த என்.சங்கரய்யா, பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
1934-ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளரான என்.சங்கரய்யா 1947-ம் ஆண்டு பொன்னுச்சாமியின் மகளான நவமணியை திருமணம் செய்து கொண்டார். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் பொறுப்பு வகித்த என்.சங்கரய்யா ஜனசக்தியின் பொறுப்பாசிரியராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவான போது அதன் இதழான தீக்கதிரின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகவும், விவசாய சங்க மாநிலத் தலைவராகவும் திறம்படச் செயலாற்றினார்.
இந்திரா காந்தி கொண்டு வந்த அவசர நிலை காலத்தில் மதுரை திடீர் நகரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கிய தலைவர் என்.சங்கரய்யா. மதவாதம், தீண்டாமை, மக்கள் ஒற்றுமை, பெண்ணடிமைத் தனத்திற்கு எதிராக மேடையில் முழங்கும் அவரது பேச்சுக்கு கட்சியின் இளையதலைமுறையினரிடையே மிகுந்த வரவேற்பு இருந்தது.
மார்க்சிஸ்ட் கட்சியை உருவாக்கிய 32 தலைவர்களில் என்.சங்கரய்யாவும் ஒருவர். தற்போது உயிருடன் இருப்பவர் கேரளாவைச் சேர்ந்த அச்சுதானந்தன் மட்டுமே. மக்கள் மன்றத்தில் மட்டுமின்றி சட்டமன்றத்திலும் தனது பேச்சால் பல்வேறு பிரச்சினைகளுக்கு என்.சங்கரய்யா தீர்வு கண்டுள்ளார். பாரதியார் கவிதைகள் மீதும், சங்க இலக்கியத்தின் மீதும் தீராத காதல் கொண்ட என்.சங்கரய்யா, வயதான காலத்திலும், லென்ஸ் உதவியுடன் அன்றாட நாளிதழ்களையும், நூல்களையும் வாசிக்கும் பழக்கம் கொண்டவர்.
சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக 1957-ம் ஆண்டு மதுரை கிழக்குத் தொகுதி தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். இதன்பின் 1962-ல் நடைபெற்ற தேர்தலிலும் தோல்வியடைந்தார். இதன்பின் 1967-ம் ஆண்டு மதுரை மேற்குத் தொகுதியில் முதன்முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்றார். அடுத்தடுத்து நடந்த 1977, 1980 தேர்தல்களிலும் மதுரை கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு என்.சங்கரய்யா வெற்றி பெற்றார்.
மக்களுக்கான போராட்டத்தில் பங்கேற்று 9 ஆண்டுகள் சிறையில் வாடிய என்.சங்கரய்யா, இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்தும் போராடினார். அவரை கவுரவிக்கும் வகையில் தமிழக அரசு தகைசால் விருது வழங்கியது. இதற்கான தனக்கு வழங்கப்பட்ட 10 லட்ச ரூபாயை கொரோனா நிவாரண நிதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் என்.சங்கரய்யா வழங்கினார்.
அவருக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்தது. ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி அந்தக் கோப்பில் கையெழுத்திடவில்லை. இந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட என்.சங்கரய்யா இன்று காலை காலமானார். அவருக்கு பல்வேறு கட்சித்தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.