பரக்கலக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான தபால் வாக்குகள் மறு எண்ணிக்கை


தஞ்சாவூர்: நீதிமன்ற உத்தரவுப்படி பட்டுக்கோட்டை ஒன்றியம் பரக்கலக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான தபால் வாக்கு மறு எண்ணிக்கை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று நடைபெற்றது.

கடந்த 30.12.2019-ல் நடைபெற்ற பரக்கலக்கோட்டை ஊராட்சி மன்ற தேர்தலில் பூட்டு சாவி சின்னத்தில் தட்சணாமூர்த்தி என்பவரும், ஆட்டோ சின்னத்தில் விநாயகம் என்பவரும் போட்டியிட்டனர். அந்தத் தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகள் 1,367. இதில் தட்சணாமூர்த்தி 3 தபால் வாக்குகளுடன் சேர்த்து 662 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட விநாயகம் 1 தபால் வாக்குடன் சேர்த்து 662 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

இரண்டு பேருமே சமமான எண்ணிக்கையில் வாக்குகளை பெற்றிருந்ததால் குலுக்கல் மூலம் விநாயகம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அதேசமயம், பதிவான வாக்குகளில் 47 வாக்குகள் செல்லாத வாக்குகளாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், தபால் வாக்கு எண்ணுவதில் தவறு நடந்துள்ளதாகவும், நான்கு தபால் வாக்குகளும் தனக்கே விழுந்துள்ளதாகவும் கூறி தட்சிணாமூர்த்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தஞ்சாவூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிமன்றம் தபால் வாக்குகளை மீண்டும் எண்ணுவதற்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் மறுவாக்கு எண்ணிக்கை இன்று காலை 11 மணிக்கு நீதிமன்ற ஆணையர் ராஜபாண்டியன் முன்னிலையில், பட்டுக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் அறையில், வட்டார வளர்ச்சி அலுவலர் கே.வீரமணியால் நடத்தப்பட்டது.

இதையடுத்து மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், தபால் வாக்கு மறு எண்ணிக்கை முடிவுகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதிமன்ற ஆணையர் ராஜபாண்டி தெரிவித்தார்.