காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் வாக்குவாதம்: தரையில் அமர்ந்து கவுன்சிலர்கள் தர்ணா


காஞ்சிபுரம் மாநகராட்சிக் கூட்டத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட கவுன்சிலர்கள்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம் நேற்று மாநகராட்சி மேயர் மகாலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆணையர் நவேந்திரன் உட்பட பல அலுவலர்கள் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும் மாநகராட்சியில் நிறைவேற்றப்பட உள்ள 96 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. இதில் 3-வது,4-வது தீர்மானம் தவிர்த்து மற்றதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட தாக மேயர் அறிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். ஒரு தீர்மானத்தை பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்ற வேண்டும். குரல் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறினர். இதனால் வாக்குவாதம் முற்றி கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதத்தில் திமுகவில் உள்ள மேயர் எதிர்ப்பு கவுன்சிலர்களும் பங்கேற்றனர். வாக்குவாதம் தீவிரம் அடைந்த நிலையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறி அறையைவிட்டு மேயர் வெளியேற முயன்றார். அப்போது எதிர்ப்பு கவுன்சிலர்கள் மேயரை உள்ளே வைத்துபூட்டினர்.

அப்போது அவருக்கு ஆதரவாக அவரது ஆதரவு கவுன்சிலர்கள் வந்து வாக்குவாதம் செய்து கதவை திறந்து மேயரை வெளியே அழைத்து வந்தனர். மேயர் தீர்மானம் நிறைவேறியதாக அறிவித்த நிலையில் பெரும்பான்மை இல்லாமல் தீர்மானம் நிறைவேறியதாக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்ப்பு கவுன்சிலர்கள் 33 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் கூட்ட அரங்கில் இருந்து மாநகராட்சி அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர். அங்கு ஆணையர் இல்லாததால் மீண்டும் கூட்டம் நடந்த இடத்துக்கு வந்த போராட்டம் நடத்தினர். மேயர் ஆதரவு திமுக உறுப்பினர்கள் 14 பேர், சுயேட்சை உறுப்பினர் ஒருவர், அதிமுக உறுப்பினர்கள் 3 பேர் என 18 பேரின் ஆதரவுடன் கூட்டம் நடைபெற்றதாக அறிவிக் கப்பட்டது.

x