சென்னை: பேரன்பை பொழிந்து வரவேற்ற தமிழர்களுக்கு நன்றி என்று அமெரிக்காவின் சிகாகோ நகருக்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். கடந்த ஆக.27-ம்தேதி சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்ற முதல்வருக்கு, சான்பிரான்சிஸ்கோவில் தமிழர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதன்பின், கடந்த ஆக.29-ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர்களை சந்தித்தார். அப்போது நோக்கியா உள்ளிட்ட 8 நிறுவனங்களுடன் 4,600 பேருக்கு வேலைவாய்ப்பளிக்கும் வகையில் ரூ.1,300 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின்முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து, கடந்த ஆக.31-ம்தேதி சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அதன்பிறகு அங்கிருந்து சிகாகோ புறப்பட்டுச் சென்றார். இதன்படி நேற்று சிகாகோ வந்த முதல்வருக்கு தமிழர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். சிறுவர்கள் ஸ்டாலின் என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி வரவேற்றனர்.
இதுகுறித்து முதல்வர் நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘‘சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து சிகாகோவுக்கு வந்தடைந்தேன். பேரன்பை பொழிந்து வரவேற்று, நெகிழ வைத்த தமிழ் உடன்பிறப்புகளுக்கு நன்றி’’ என தெரிவித்துள்ளார். முன்னதாக சான்பிரான்சிஸ்கோவில் அமெரிக்கா வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவருக்கும் துர்காஸ்டாலினுக்கும் பறை இசைமற்றும் திருக்குறள் பாடல்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது