அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடையை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளைக் கலைத்து பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வந்த தீர்மானத்துக்கும், ஓ.பன்னீர்செல்வம் உள்பட நான்கு பேரை நீக்கிய தீர்மானத்துக்கும் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்தது.
இந்த நிலையில் அதிமுகவின் பெயர், சின்னம் ஆகியவற்றை பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்து பயன்படுத்த தடைவிதிக்கக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றைப் பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு இடைக்காலத் தடை விதித்து கடந்த 6-ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்யவுள்ளதாகவும், அதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென கடந்த 8-ம் தேதி ஓபிஎஸ் சார்பில் முறையிடப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அன்றே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தனர். ஆனால், மனு அன்று பட்டியலிடப்படாத நிலையில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, மனுத் தாக்கல் நடைமுறைகள் முடிந்த நிலையிலும் விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை எனத் தெரிவித்தார். மனுதாக்கல் செய்த அன்றே விசாரிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.
முறையீடு செய்யப்பட்ட அன்றே மனுத் தாக்கல் செய்யாத நிலையில் எப்படி விசாரணைக்கு எடுக்க முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், விசாரணையை ஒத்தி வைத்த நிலையில், இன்று மனு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.