ஹரியாணாவில் இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்ட 12 பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹரியாணா மாநிலம் ஜஜ்ஜார் மாவட்டத்தின் பஹதுர்கர் என்ற இடத்தில் இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் மாநில தலைவர் நஃபே சிங் ரதீ (66) மற்றும் அக்கட்சித் தொண்டர் ஜெய்கிஷன் ஆகியோர் நேற்று முன் தினம் இரவு சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கொலையில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களைப் பிடிக்க போலீஸார் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
ஹரியாணாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. விரைவில் மக்களவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்த கொலை சம்பவம், ஹரியாணா அரசியலில் புயலைக் கிளப்பி உள்ளது. இதனால் இந்த கொலை விவகாரம் அங்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதையடுத்து கொலைக்கு காரணமான அனைவரும் சட்டப்படி தண்டிக்கப்படுவர்' என, ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறியிருந்த நிலையில், இந்தக் கொலையில் பாஜகவினருக்குத் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதையடுத்து நஃபே சிங் ரதீ மற்றும் கட்சித் தொண்டர் கொலை வழக்கில், பாஜகவைச் சேர்ந்த, பஹதுர்கர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ நரேஷ் கவுசிக் உட்பட 12 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஹரியாணா மாநில போலீஸார் தெரிவித்துள்ளனர்.