தமிழ்நாடு விவசாயிகளுக்கு குட்நியூஸ்... தானிய ஈட்டுக்கடன் உச்சவரம்பு ரூ.25 லட்சமாக உயர்வு!


விவசாயி

கூட்டுறவுத்துறையின் மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டு வரும் தானிய ஈட்டுக்கடன் உச்ச வரம்பு10 லட்ச ரூபாயில் இருந்து 25 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பொதுமக்களும், விவசாயிகளும் பயன்பெறும் வகையில் பல்வேறு வகைக் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதிக எண்ணிக்கையில் பயனாளிகள் பயன்பெறும் வகையில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் அனைத்து வகை கடன்களுக்கும் 2023-24-ம் ஆண்டிற்கான குறியீட்டினை அதிகரித்து மறுநிர்ணயம் செய்து வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகள், தங்களது மாவட்டங்களில் விளைபொருட்களைச் சேமித்து வைத்து, நல்ல விலை கிடைக்கும்போது விற்று பயன்பெறும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சொந்த கிடங்கு வசதி இல்லாத சிறு மற்றும் குறு விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களுக்குச் சொந்தமான கிடங்குகளை பயன்படுத்தி, தானியங்களை பாதுகாப்பாக இருப்பு வைத்துக் கொள்ளலாம்.

மேலும், உடனடி நிதி தேவைக்காக, தானியங்களுக்கு ஈடாக தானிய ஈட்டுக் கடனும் பெறும் நடைமுறையும் வழக்கத்தில் உள்ளது. தானியங்களின் சந்தை மதிப்பில், 75 சவீதம் வரை, 10 சதவீதம் முதல் 11.75 சதவீம் வட்டியில் கடன் பெறலாம். இந்த தொகையை ஓராண்டு தவணையில், ஒரே நேரத்திலோ, மொத்தமாகவோ அல்லது பகுதியாகவோ திருப்பிச் செலுத்தலாம்.

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கம்

தமிழ்நாட்டில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் 5,47,800 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 4,047 கிடங்குகளைக் கொண்டுள்ளது. அவற்றில் 1,164 கிடங்குகள் ஏற்கெனவே கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தின் அங்கீகாரம் பெற்று பதிவு செய்யப்பட்டுள்ளன. இக்கடன், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2023-24-ம் ஆண்டில் 2024-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி வரை 202.98 கோடி ரூபாய் அளவிற்கு 4791 விவசாயிகள் கடன் பெற்று பயனடைந்துள்ளனர்.

அதன்படி, சில மத்தியக் கூட்டுறவு வங்கிகள், விவசாயிகள் அதிகம் பயன்பெறும் வகையில் தானிய ஈட்டுக்கடனின் உச்ச வரம்பை உயர்த்திட கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று கடன் குறியீட்டினை எய்த ஏதுவாகவும், பயனாளிகள் அதிக அளவில் பயனடையும் வகையிலும் தானிய ஈட்டுக்கடன் உச்ச வரம்பு 10 லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்த்தி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு அறிவுரைகளைப் பின்பற்றி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் தானிய ஈட்டுக்கடன் வழங்குதல் தொடர்பாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக உரிய துணை விதி திருத்தங்கள், ஒழுங்குமுறை விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் நெல், மணிலா, மஞ்சள், சாமை, தினை உள்ளிட்ட தானியங்களை கூட்டுறவு சங்கங்களுக்கு சொந்தமான கிடங்குகளில் சேமித்து வைத்து, தானிய ஈட்டுக்கடன் பெறலாம். அதிக விலை கிடைக்கும் போது, தானியங்களை விற்பனை செய்து பயன்பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

x