ராமநாதபுரம்: பரமக்குடியில் செப்டம்பர் 11ல் நடைபெறும் இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வருவோர் வாடகை வானகங்களில் வந்து செல்ல அனுமதியில்லை என ராமநாதபுரம் ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,"ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்.11ல் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. ராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து அஞ்சலி செலுத்த வருவோர் வாடகை வாகனங்கள், திறந்தவெளி வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், சைக்கிள் போன்றவற்றில் வர அனுமதியில்லை. சொந்த வாகனங்களில் மட்டுமே வந்து செல்ல வேண்டும்.
சொந்த வாகனங்களில் வருவோர் வாகன எண், வாகன பதிவுச் சான்று, ஓட்டுநர் உரிமம், வாகனத்தில் பயணம் செய்வோர் விபரங்களை செப்.6-க்கு முன்பாக சம்பந்தப்பட்ட டிஎஸ்பி அலுவலகங்களில் அளித்து வாகன அனுமதிச்சீட்டு பெற வேண்டும். பிற மாவட்டங்களில் இருந்து சொந்த வாகனங்களில் வருவோர் அந்தந்த மாவட்டங்களில் முறையான அனுமதி பெற்று வர வேண்டும்.
அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடத்திற்கு வந்து செல்ல வேண்டும். வாகனத்தின் மேற்கூரையில் பயணம் செய்யவும், ஆயுதங்கள் எடுத்து வரவும், ஒலி பெருக்கிகள் பொருத்தவும் அனுமதியில்லை. வரும் வழித்தடங்களில் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது. சாதி, மத உணர்வுகளை தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களைக் கட்டி வரவோ, கோஷசங்கள் எழுப்பவோ கூடாது.
தெளிச்சாத்தநல்லூர் சந்திப்பு முதல் சந்தைப்பேட்டை சந்திப்பு வரை சாலையில் எந்த வாகனத்தையும் நிறுத்தக் கூடாது. மேலும் ஓட்டப்பாலம் சந்திப்பு, நவீன் பேக்கரி, காவல் நிலையம், பொன்னையாபுரம் மேம்பாலம் வரையிலான சாலைகளிலும் எந்த வாகனத்தையும் நிறுத்தி வைக்கக் கூடாது. வரும் வழியில் போக்குவரத்தக்கு இடையூறு செய்யும் வகையில் வாகனங்களை நினைத்த இடத்தில் நிறுத்தக் கூடாது.
கிராமங்களிலிருந்து பேருந்துகளில் வருவோர் காலை 10 மணிக்குள் புறப்பட வேண்டும். பேருந்துகளில் பிளக்ஸ் போர்டு, பேனர், கட்சி கொடிகள், டிரம்செட், ஒலி பெருக்கி பயன்படுத்தக்கூடாது. பேருந்தில் அனைவரும் பயணச்சீட்டை பெற்றுவர வேண்டும். அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் வரும் பொழுது உடன் மூன்று சொந்த வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும்.
தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு செல்ல வேண்டும். இதற்கு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் செப்.6 மாலை 5.45 மணிக்கு முன்பாக விண்ணப் பத்தினை அளிக்க வேண்டும். நடைப்பயணமாக அஞ்சலி செலுத்த வரக்கூடாது. பரமக்குடி நகருக்குள் மட்டும் அனுமதிக்கப்பட்ட 1 கி.மீ தொலைவிற்குள் மட்டுமே நடைபயணமாக செல்லலாம்.
ஜோதி, முளைப்பாரி மற்றும் பால் குடம் ஆகியவற்றை நினைவிடத்திலிருந்து 1 கி.மீ தொலைவிற்குள் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடத்தில் மட்டும் எடுத்துவர அனுமதிக்கப்படும். சொந்த ஊரில் செப்.11ம் தேதிக்கு முன்போ, பின்போ எவ்வித நிகழ்ச்சிகள் கொண்டாடவும், ஒலி பெருக்கி அமைப்பதற்கும் அனுமதி இல்லை. செப்.11 அன்று மட்டும் சொந்த ஊரில் ஒலி பெருக்கியின்றி புகைப்படம் வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தலாம். பரமக்குடி நினைவிடத்தில் செப்.11 அன்று மட்டும் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படும்.
நினைவிடத்தில் தேவேந்திர பண்பாட்டுக் கழகம் சார்பாக மட்டும் கூட்டத்தை முறைப்படுத்த ஒரு ஒலி பெருக்கி மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். நினைவிடத்திற்குள் தலைவர்கள் ஒலி பெருக்கியில் பேசுவதற்கு அனுமதியில்லை. நினைவிடத்தில் மாலை 4 மணிக்குள் அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொள்ள வேண்டும்" என்று ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் கூறினார்.