மேக்கரை அருகே சிறுத்தை நடமாட்டம் - கூண்டுகளை வைத்தது வனத்துறை


தென்காசி: தென்காசி மாவட்டம் மேக்கரை அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் வைத்து, வனத்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய விவசாய நிலங்களில் வன விலங்குகள் அடிக்கடி புகுந்து சேதப் படுத்தி வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேக்கரை அருகே சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டது. சமீபத்தில் வடகரை பகுதியில் 3 பசுமாடுகளை சிறுத்தை கடித்துக் கொன்றது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர். சிறுத்தையால் கால்நடைகளுக்கும், மனித உயிருக்கும் ஆபத்து ஏற்படும் நிலை இருப்பதால் அதனை கூண்டு வைத்து பிடித்து, வனப்பகுதிக்கு கொண்டுசென்று விட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவின்பேரில் கடையநல்லூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் தலைமையில் வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணித்து வந்தனர். இதையடுத்து, மேக்கரை அடவிநயினார் அணை அருகேயும், மேக்கரை அன்பு இல்லம் அருகிலும் சிறுத்தையை பிடிக்க 2 கூண்டுகள் இன்று வைக்கப்பட்டன. லாரியில் கொண்டு செல்லப்பட்ட கூண்டுகளை அந்த இரண்டு இடங்களிலும் வைத்து அவற்றின் உள்ளே ஆடுகளை கட்டிப் போட்டுள்ளனர்.

மேலும், சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் மேக்கரை பகுதியில் வன விலங்குகள் நடமாடும் பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என வனத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். கூண்டில் சிறுத்தை சிக்கியதும், அதனை வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் கூறியுள்ளனர்.

x