தமிழக மக்களிடம் மன்னிப்பு: மத்திய அமைச்சர் ஷோபா உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்


ஷோபா கரந்தலாஜே | கோப்புப்படம்

சென்னை: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே-வில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசியதற்காக தமிழக மக்களிடம் மன்னிப்பு கோருவதாக மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே-வில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தான் காரணம் என மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதுதொடர்பாக திமுகவைச் சேர்ந்த சி.தியாகராஜன் என்பவர் அளித்த புகாரின் பேரில் மதுரை சைபர் க்ரைம் போலீஸார் இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஷோபா கரந்தலஜே மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஷோபா கரந்தலாஜே சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பாக இன்று (செப்.3) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஷோபா கரந்தலஜே தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.ஹரி பிரசாத், “இதுதொடர்பாக தமிழக மக்களிடம் மன்னிப்பு கோருவதாக ஷோபா சார்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தார். அதில், ராமேஸ்வரம் கஃபே-வில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறிய எனது கருத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை.

எனது இந்த கருத்து தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருந்தால் அதற்காக தமிழக மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன். இதற்காக ஏற்கெனவே சமூக வலைதளம் வாயிலாக மன்னிப்பு கோரிவிட்டேன். தமிழர்களின் பண்பாடு, வரலாறு, கலாச்சாரம் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். எனவே எனது இந்த மன்னிப்பை ஏற்றுக்கொண்டு என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்,” என கோரியிருந்தார்.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் மற்றும் குற்றவியல் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன் ஆகியோர் இதுதொடர்பாக அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாக கூறினர். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி வியாழக்கிழமைக்கு (செப்.5) தள்ளி வைத்தார்.

x