குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் இடிபாடு: சாலை துண்டிக்கப்படும் அபாயம்


குன்னூர்: குன்னூர் மலைப் பாதையில் தேசிய நெடுஞ்சாலை சார்பில் சாலை விரிவாக்க பணிகளின் போது ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் இந்த வழியே மேலும் கனரக வாகனங்களை இயக்கினால் சாலை துண்டிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணிகள் உட்பட பலரும் பயன்படுத்தும் முக்கிய மலைப் பாதையாக குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த வழியாக நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் இந்த சாலையில் 5 இடங்களில் பாலங்கள் உட்பட சாலை விரிவாக்கம் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், குன்னூர் குரும்பாடி அருகே பொக்லைன் இயந்திரம் மூலமாக மண் அகற்றும்போது சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

இதனால் சாலை துண்டிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு கருதி அறிவிப்பு பலகைகள் வைத்தாலும் கனரக வாகனங்கள் செல்லும்போது அதிக அளவில் அதிர்வு ஏற்படுகிறது. மேலும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. தற்போது குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இந்த சாலை இடிந்து விழுவதற்கான சாத்தியக் கூறுகள் நிறைய உள்ளது. எனவே, போர்க்கால அடிப்படையில் சாலை விரிவாக்கப் பணிகளை துரிதப் படுத்த வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

x