உதகை: நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் பாதையில் ஹில்குரோவ் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் இன்று ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கேரளாவின் தெற்கு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, நீலகிரி மாவட்டத்தில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாயாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கூடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தாழ்வான இருவயல் உட்பட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
இந்நிலையில், ஹில்குரோவ் ரயில் தடத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் மலை ரயில் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையேயான, மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பதிவான மழை பொழிவு: இன்று காலை, 8:30 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக கெத்தையில் 10 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. கோடநாட்டில் 11 செ.மீ, குந்தாவில் 9 செ.மீ, குன்னுாரில் 7 செ.மீ., மழை பெய்துள்ளது. தவிர, பெரும்பாலான பகுதிகளில், 5 செ.மீட்டருக்கும் மேல் மழை பொழிவு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக உதகை - ஹோபார்ட் சாலை, மஞ்சூர் - கிண்ணக்கொரை சாலை, கோரகுந்தா - அப்பர் பவானி உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே, பொதுமக்கள் தங்களது பகுதியில் கனமழை பாதிப்பு இருந்தால் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்து நிவாரண முகாம்களில் தங்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.