ராமேசுவரம்: ராமேசுவரத்திலிருந்து மீண்டும் தலைமன்னார் கப்பல் போக்குவரத்துக்கான சாத்தியக் கூறுகள் குறித்து தமிழக அரசின் சிறு துறைமுகங்கள் துறை சார்பாக ஆய்வுகள் துவங்கி உள்ளது.
இந்திய - இலங்கைக்கு இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆங்கிலேயர்கள் காலத்தில் இந்தியாவின் தனுஷ்கோடிக்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் 24.02.1914ல் அன்று துவக்கப்பட்டது. 22.12.1964ல் தனுஷ்கோடி புயலில் அழிந்த பிறகு 1965ம் ஆண்டிலிருந்து ராமேசுவரத்திலிருந்து இலங்கை தலைமன்னாருக்கும் மீண்டும் கப்பல் போக்குவரத்து துவங்கப்பட்டது. இலங்கையில் உள்நாட்டு போரினால் 1981ம் ஆண்டு கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், தமிழக அரசு சார்பில் இந்திய - இலங்கை நாடுகளுக்கிடையே குறைந்த தூர பயணிகள் கப்பல் போக்குவரத்தினை ராமேசுவரம் - தலைமன்னார், ராமேசுவரம் - யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஆகிய இரண்டு வழித் தடங்களில் இயக்குவதற்கு ராமேசுவரத்தில் கப்பலணையும் மேடை, பயணிகள் தங்குமிடம், சுங்க மற்றும் குடிமைப் பிரிவு சோதனை மையங்கள் ஆகிய கட்டுமானங்களை ஏற்படுத்துவதற்கு திட்ட அறிக்கை மற்றும் மதிப்பீடுகள் மத்திய அரசின் ஒப்புதலுக்கு சமீபத்தில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்பகுதியில் தமிழக அரசின் சிறு துறைமுகங்கள் துறை சார்பாக ஐஐடி நிபுணர்கள் குழு கடலடியில் மண்ணின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆய்வுப் பணி முடிந்து இதன் அறிக்கை சிறு துறைமுகங்கள் துறைக்கு சமர்பிக்கப்பட்ட பின்னர், ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளுக்கான படகு போக்குவரத்தை விரிவுப்படுத்துதல், ராமேசுவரத்திலிருந்து மீண்டும் தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்தினை துவங்குவதற்கான சாத்தியக் கூறுகள், ராமேசுவரம் துறைமுகத்திற்கான நிர்வாக அலுவலகம் கட்டப்படுவது குறித்தான அறிவிப்புகள் வெளியாகும் எனத் தெரிகிறது.