மலைக்க வைத்த தாய் மாமன் சீர்... வண்டி வண்டியாய் சீரு, வாய்க்கு ருசியாய் சோறு!


சீர் கொண்டு வரும் தாய் மாமன் வீட்டார்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே மலை கிராமத்தில் சகோதரி மகளுக்கு தாய்மாமன்கள் கொண்டு வந்த சீர்வரிசை அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.

சாரட் வண்டியில் வந்த தீபா அக்ஷயா

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது கே.சி.பட்டி. இங்குள்ள தொழிலதிபர் ஏ.சி.ஐயப்பன் என்பவர் மகள் தீபா அக்சயாவுக்கு நேற்று பிப்ரவரி 25ம் தேதி பூப்புனித நீராட்டு விழா நடைபெற்றது.

இதற்காக தீபா அக்சயாவின் தாய்மாமன்கள் 3 பேர், சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து தனது மருமகளான தீபா அக்சயாவை குதிரை பூட்டிய சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்து வந்தனர். தாய்மாமன் சீர் வரிசையாக வாழை, மாதுளை, திராட்சை உள்ளிட்டவைகளும் அனைத்து வகையான மிட்டாய்கள், அரிசி, பருப்பு, இனிப்பு வகைகள் என 233 வகையான சீர்வரிசை தட்டுகளை பெண்கள் தலைகளில் சுமந்து ஊர்வலத்திற்கு முன்பாக நடந்து வந்தனர்.

விழாவில்

செண்டை மேளதாளம் முழங்க, கேரளா பாரம்பரிய நடனம் என மலைக்கிராமத்தையே வியக்க வைக்கும் வகையில் அவர்களது சீர்வரிசை அமைந்திருந்தது. மேலும், மலைக்கிராம மக்கள் தங்களது பகுதியில் சேகரிக்கப்பட்ட வாழை, தேன், காய்கறிகள் உள்ளிட்டப் பொருட்களையும் சீர்வரிசையாகக் கொண்டு வந்தனர்.

முடிந்தவரை தங்கள் தலைகளில் சுமந்தும் குறிப்பிட்ட அளவிற்கு மேல் உள்ளவற்றை லாரியில் வைத்தும் கொண்டு வந்தனர். அனைவருக்கும் மிகப் பிரம்மாண்டமான விருந்து பரிமாறப்பட்டது.

நாகரிகம் என்ற பெயரில் நமது பழைய கலாச்சாரங்களை நாம் மறந்து விட்டாலும் மலை கிராம மக்கள் யாரும் இன்னும் அதனை மறந்துவிடவில்லை என்பது இதன் மூலம் உணர்த்தப்பட்டுள்ளது.

x