தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனையில் விரைவில் குழந்தைகள் நல மருத்துவமனை: மா.சுப்பிரமணியன் தகவல்


கும்பகோணம்: சென்னை, எழும்பூரில் மட்டும் இயங்கி வந்த குழந்தைகள் நல மருத்துவமனை, சென்னை, கிண்டி மற்றும் தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவ மனைகளில் விரைவில் அமைய உள்ளது என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கும்பகோணத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் ரூ.5.70 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள் திறப்பு விழாவும் ரூ.5.40 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்தும் புதிய கட்டிடங்கள் கட்ட அடிக்கல்லும் நாட்டினர்.

இந்த விழாவுக்கு அரசு தலைமை கொறடா கோ.செழியன் முன்னிலை வகித்தார். எம்பி-க்கள் எஸ்.கல்யாணசுந்தரம், ஆர்.சுதா, எம்எல்ஏ-வான சாக்கோட்டை க.அன்பழகன், மருத்துவ நலப் பணிகள் இயக்குநர் ஜெய.ராமமூர்த்தி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் தி.ச.செல்விநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: "தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் தன்னிறைவு பெற்றிருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பணியாற்றி வருகிறார். விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் எய்மே, எய்ம்ஸ் தான். எப்படியாவது அதைக் கொண்டு வந்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் செயல்பட்டு வருகிறார்.

தமிழகத்தில் உள்ள சில மருத்துவமனைகளில் உள்ள குழந்தைகளுக்கான பல்நோக்கு மருத்துவமனை, மேலும் சில மாவட்டங்களுக்கு கொண்டு வரப்படுகிறது. இதில் தஞ்சாவூர் மாவட்டமும் சேர்க்கப்பட்டதற்கு சுகாதாரத்துறை அமைச்சரே காரணம்" என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், "கும்பகோணம் மருத்துவமனையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக ரூ.10 கோடி மதிப்பிலான திட்டங்களை வகுத்து, சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைத்தால், விரைந்து மேற்கொள்ளப்படும். இங்கு எம்ஆர்ஐ ஸ்கேன் அமைப்பதற்கு அரசு ஆணை வழங்கப்பட்டு விட்டது. அதற்கான கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு ஸ்கேன் வசதி ஏற்படுத்தப்படும். இங்கு இயங்கும் 4 யூனிட் டயாலிசிஸ் மூலம் மாதத்திற்கு 260 பேர் பயனடைகிறார்கள். மேலும் 7 யூனிட்கள் என 11 யூனிட்கள் அமைக்கப்பட உள்ளன.

தற்போது உள்ள உணவு பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி இல்லாமை போன்ற பல்வேறு விஷயங்களால் நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதற்கேற்ற வகையில் மருத்துவ வசதிகள் செய்வது அரசின் கடமையாகும். தமிழகத்தி்ல 708 நகர்புற நலவாழ்வு மருத்துவமனை அமைக்க வேண்டும் என முடிவு செய்து 500 மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன, இதில் 150-க்கும் மேற்பட்டவை பணிகள் முடிந்து திறக்கப்பட உள்ளன.

தஞ்சாவூரில் ரூ.2 கோடியே 89 லட்சம் மதிப்பில் மருந்தாக்கியர் கட்டிடமும், ரூ.10 கோடி மதிப்பில் 100 படுக்கைகள் கொண்ட குழந்தை நலப்பிரிவு கட்டிடமும், ரூ.20 கோடி மதிப்பில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவுக்கான கட்டிடமும் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், ரூ.42 கோடியில் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு கட்டிடமும், முழு உடல் பரிசோதனைக் கூடம் ரூ.1 கோடி மதிப்பிலும், அவசர சிகிச்சை பயிற்சி மையம் ரூ.1 கோடியே 40 லட்சத்திலும் அமைக்கப்பட்டு வருகிறது.

இதேபோல், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ரூ.10 கோடி மதிப்பில் மகப்பேறு கட்டிடம், பேராவூரணியில் ரூ.5.75 கோடி செலவில் கூடுதல் தொழு நோயாளிகள் கட்டிடமும் நடுக்காவிரி, கரந்தட்டான்குடி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு கட்டிடப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் உள்ள 38 வருவாய் மாவட்டங்களில் தஞ்சாவூரில் மட்டும் ரூ.107.34 கோடி மதிப்பில் பல்வேறு மருத்துவத் துறை தொடர்பான 32 கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை, எழும்பூரில் மட்டும் இயங்கி வந்த குழந்தைகள் நல மருத்துவமனை, சென்னை, கிண்டி மற்றும் தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவ மனைகளில் விரைவில் அமைய உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம் மற்றும் நகர்புற சுகாதார நிலையங்களில் பாம்பு கடி, நாய் கடிக்கான மருந்துகளை தயாராக இருப்பு வைத்துள்ளோம. அங்கு போதுமான இருப்பு உள்ளதா என அவ்வப்போது கண்காணித்து வருகின்றோம்.

தற்போது மாரடைப்பு நிகழ்வுகள் அதிகரித்து வருவதால், இதற்கான அறிகுறிகள் தெரிய வந்தவுடன், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் சென்று அங்கு தரப்படும் மாத்திரைகள் உட்கொண்ட பிறகு, அடுத்த கட்டமாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். இதனால் சுமார் 3 மணி நேரம் அவர்களை பாதுகாக்கலாம். இந்த மாத்திரைகளால் இதுவரை மொத்தம் 10,483 பேர் பயனடைந்துள்ளனர். குரங்கு அம்மை தொடர்பாக அனைத்து பன்னாட்டு விமான நிலையத்திலும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் அங்கேயே தங்கி, அங்கு அமைத்துள்ள வார்டில் அனுமதித்து சிகிச்சை பெறும் வகையிலும், மேலும், அந்த ஊர்களில் உள்ள மருத்துவமனைகளில் தனி வார்டில் சிகிச்சையளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் குரங்கு அம்மை நோய்க்கான பாதிப்பு இதுவரை இல்லை" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

x