அதிகாரிகளை கண்டித்து ஒட்டிய போஸ்டரை அகற்ற 1 நாள் கெடு: அகற்ற மறுத்தது திராவிடர் விடுதலைக் கழகம்


புதுச்சேரி: இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிகாரிகளை கண்டித்து ஒட்டிய போஸ்டரை அகற்ற 24 மணி நேரம் கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், போஸ்டர்களை அகற்ற மாட்டோம் என திராவிடர் விடுதலைக் கழகம் அறிவித்துள்ளது.

புதுவையில் கல்வி, வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 18 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. கடந்த 2015ல் அரசிதழ் பதிவு பெறாத குரூப்-பி பதவிகளை நிரப்ப கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டது. இதுதொடர்பாக அப்போதைய பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை சார்பு செயலர் இடஒதுக்கீடு வழங்க தேவையில்லை என அறிவிப்பு வெளியிட்டார். 2022ல் துறைமுகத் துறையில் பணியிடங்களை நிரப்ப வெளியிட்ட அறிவிப்பிலும் இடஒதுக்கீடு தேவையில்லை என அதிகாரி ஆணை வெளியிட்டார்.

இது தொடர்பாக அதிகாரிகள் கண்ணன், ஜெய் சங்கர் ஆகிய இருவருக்கும் அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கடந்த மாதம் பெரியார் திராவிடர் கழக தலைவர் லோகு அய்யப்பன் தலைமையில் முதலியார்பேட்டையில் உள்ள அதிகாரிகள் வீட்டு வாசலில் மலர் வளையம் வைத்து ஒப்பாரி போராட்டம் நடத்தினர். அப்போது பெண்கள் தலைவிரி கோலத்துடன் ஒப்பாரி போராட்டம் நடத்தினர். இதனால் அதிகாரிகள் குடும்பத்தினர் மன வேதனை அடைந்தனர்.

இது தொடர்பாக புதுவையில் உள்ள அனைத்துத் துறைகளிலும் பணிபுரியும் பிசிஎஸ் அதிகாரிகள் 80-க்கும் மேற்பட்டோர் தட்டாஞ்சாவடி மாவட்ட தொழில் மையத்தில் ஆலோசனை நடத்தி முதல்வர் ரங்கசாமி வீட்டுக்குச் சென்று முறையிட்டனர். அப்போது, போராட்டம் நடத்தியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களுக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும் என அதிகாரிகள் முதல்வரிடம் முறையிட்டனர். அதற்கு முதல்வர் ரங்கசாமி சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக உறுதி தந்திருந்தார்.

இந்நிலையில், நகரெங்கும் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் அதிகாரிகளுக்கு எதிராக புதிதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதில், ‘புதுச்சேரியில் 1 சதவீதம் இருக்கும் உயர் சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு தந்து புதுச்சேரி மக்களின் கல்வி, வேலைவாய்ப்பை பறிக்கும் சார்புச் செயலர்களின் வாகனங்களை மறித்து முற்றுகைப் போராட்டம் எங்கேயும், எப்போது வேண்டுமானாலும் நடத்துவோம்’ என்று வாசகங்கள் இடம் பெற்றிருப்பதால் அரசு அதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் அர்ஜூன் ராமகிருஷ்ணன், அதிகாரிகளுக்கு எதிராக ஒட்டியுள்ள போஸ்டரை 24 மணி நேரத்திற்குள் அகற்ற இன்று கெடு விதித்துள்ளார். இல்லாவிட்டால் புதுவை திறந்தவெளி தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த உத்தரவை பெற்றுக் கொண்ட திராவிடர் விடுதலைக்கழக தலைவர் லோகு அய்யப்பன், “மாவட்டத் துணை கலெக்டரின் கருத்துரிமைக்கு எதிரான இந்த ஆணையை முழுமையாக மறுதலிக்கிறேன். சமூக நீதிக்கு எதிராக தொடர்ந்து செயல்படும் அதிகாரிகளுக்கு எதிரான எங்களின் அறவழிப் போராட்டம் தொடரும். இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க வழக்கோ, சிறை தண்டனையோ எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள மகிழ்ச்சியோடு காத்திருக்கிறோம். ஒட்டிய போஸ்டர்களை அகற்ற மாட்டோம்” என்று லோகு அய்யப்பன் கூறியுள்ளார்.

x