234 தொகுதிகளில் 8,647 கி.மீ தூரம் திமுக வாகனப் பேரணி: உதயநிதி நாளை தொடங்கி வைக்கிறார்!


உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணி சார்பில் கன்னியாகுமரியில் தொடங்கி தமிழகமெங்கும் 234 சட்டமன்ற தொகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் நடைபெற உள்ள பிரம்மாண்ட இரு சக்கர வாகன பிரச்சார பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை(நவ.15) தொடங்கி வைக்கிறார்.

திமுக இளைஞரணி

மாநில உரிமைகளை மீட்க அழைக்கிறார் உதயநிதி என்ற முழக்கத்தோடு திமுக இளைஞரணி சார்பில் இந்த பிரச்சார பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு திமுக ரைடர்ஸ் குழு பக்கபலமாக களமிறங்கியுள்ளது.

நவம்பர் 15-ம் தேதி தொடங்கி உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளான நவம்பர் 27-ம் தேதி வரை இரு சக்கர வாகன பிரச்சார பேரணி நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 188 இரு சக்கர வாகனங்கள் இந்த பிரச்சார பயணத்தில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

இதில் கலந்து கொள்பவர்களுக்கு மூன்று வேளையும் அறுசுவை உணவு, தங்குமிடம், தலைக்கவசம், கொள்கை முழக்க டி-ஷர்ட், வாகனக் கொடிக்கம்பம், டிராவல் பேக், முதலுதவி சிகிச்சை மெடிக்கல் கிட், சோப்பு, சீப்பு, பேஸ்ட் கிட், குடிநீர் என அனைத்து அடிப்படை வசதிகளும் திமுக இளைஞரணி சார்பில் செய்து கொடுக்கப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலின்

திமுக ரைடர்ஸ் குழுவில் இணைந்து தமிழகமெங்கும் இரு சக்கர வாகனப் பிரச்சாரப் பேரணியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் ஷூ கட்டாயம் அணிய வேண்டும், கருப்பு அல்லது ஜீன்ஸ் பேண்ட் அணிய வேண்டும். ஓட்டுநர் உரிமத்தின் நகலைக் கொடுக்க வேண்டும். வாகன உரிமைச் சான்று நகல் கொடுக்க வேண்டும். வாகனக் காப்பீட்டு சான்று நகல் தர வேண்டும் என்பன உள்ளிட்ட இன்னும் சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இரு சக்கர வாகனப் பிரச்சார பேரணியை நாளை தொடங்கி வைப்பதற்காக இன்று மாலையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரி செல்லவுள்ளார். 13 நாட்களில் 8,647 கிலோ மீட்டர் தூரத்தை கடக்கும் வகையில் பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

x