சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக வளாகத்தில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை விளக்க கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

2019-ம் ஆண்டு சிஏஎஸ் பதவி உயர்வு தேர்வுக்குழுவை மாற்றியமைக்கூடாது என வலியுறுத்தி இந்த கோரிக்கை விளக்கக் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் இன்று (செப்.2) மாலை நடைபெற்றது. நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். இதில் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் செல்வராஜ், அசோகன், தனசேகரன், கார்த்திகேயன், சுதாகர் உள்ளிட்டோர் நிர்வாகிகள் பலர் பங்கேற்று பேசினார். பின்னர் நடைபெற்ற கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.பின்னர் ஒருங்கிணைப்பாளர் சி.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியது: “அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிச்சிக்கலால் அரசு பொறுப்பேற்ற 8 ஆண்டுகளுக்குப் பிறகே ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு தேர்வுக்குழு என்பது நடத்தப்பட்டு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன. அதிலும் தகுதிபெற்ற நாளிலிருந்து பணப்பயன்களை வழங்கமல் 01.06.2019 முதல் கணக்கிட்டு வழங்கப்பட்டது. இதனால் ஒவ்வொரு ஆசிரியருக்கும் ரூ 5 முதல் 10 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டது. வேறு பல்கலையில் இருந்து வந்த அன்றைய துணைவேந்தர் பேராசிரியர் வி.முருகேசனால் பதவி உயர்வு வழங்கப்பட்டது.

யுஜிசி விதிமுறைகளின்படி ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட வேண்டிய பதவி உயர்வுகள் 2019 பிறகு இன்றுவரை நடத்தப்படவில்லை. கடந்த 2017 முதல் தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறை. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சட்டப்படி அமைக்கப்பட்ட நிதிக்குழு, ஆட்சிக்குழுவில் அங்கீகரிக்கப்பட்ட பதவி உயர்வுகளை வழங்கும் சிஏஎஸ் போர்டை தற்போது உள்ள நிதிக்குழு மற்றும் ஆட்சிக்குழு மாற்றியமைக்க முயற்சி செய்யாது என நம்புகிறோம். யுஜிசி விதிமுறைகளின் படி ஒரு தேர்வுக்குழுவில் தேர்வு பெற இயலாத ஆசிரியர்கள் அடுத்த ஒரு ஆண்டுக்குள் வாய்பளிக்கபபட்டு பதவி உயர்வுகள் வழங்கிட வேண்டும்.

அந்த வாய்ப்பை இந்த நிர்வாகம் எவருக்கும் வழங்காத நிலையில் 5 ஆண்டுகள் கழித்து ஏற்கெனவே வழங்கப்பட்ட பதவி உயர்வுகளை ரத்து செய்ய முயல்வது ஆசிரியர் நலனுக்கு முற்றிலும் விரோதமானது. ஆகவே 2019-ம் ஆண்டு பதவி உயர்வு தேர்வுக்குழுவை பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு அப்படியே எவருக்கும் எந்த பாதிப்பும் இன்றி அங்கீகரிப்பதுடன் அதில் பதவி உயர்வு கிடைக்காதவர்கள் எவரும் இருந்தால் சிறப்பு தேர்வுக்குழு நடத்தி இன்றைய தேதி வரை தகுதி பெற்ற அனைவருக்கும் பதவி உயர்வுகள் வழங்கிட வேண்டுகிறோம்,” என்றார்.

x