புதுடெல்லி: முல்லை பெரியாறு கண்காணிப்புக் குழு கூட்டத்தில் அணை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணையின் ஆய்வுப் பணியை 12 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள மத்திய நீர் வளத்துறை ஆணைய தலைமை அலுவலகத்தில் முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு கண்காணிப்பு குழுவின் ஆலோசனை இன்று கூட்டம் நடந்தது. முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு கண்காணிப்பு குழுவின் தலைவர் ராகேஷ் காஷ்யப் தலைமையில் நடந்த கூட்டத்தில், தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். தமிழ்நாடு சார்பில் காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் அணை பாதுகாப்பு சட்டப்படி ஆய்வை 2026-ம் ஆண்டு மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரியது. மேலும், முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணியை மேற்கொண்ட பின்னர், அணை பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என தமிழ்நாடு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
அதேபோல், கேரளா தரப்பில் அணை பாதுகாப்பு தொடர்பான ஆய்வை கால தாமதம் செய்யாமல் உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து அணையின் உறுதி தன்மையை 12 மாதங்களுக்குள் ஆய்வு செய்ய வேண்டும் எனவும், அணை பாதுகாப்பு தொடர்பான ஆய்வை நடத்த வேண்டும் எனவும் முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு கண்காணிப்பு குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.