மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் யானைகள் கணக்கெடுப்பு பணி இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது.
தமிழக வனக்கோட்டங்களில், ஆண்டுக்கு ஒரு முறையும், முதுமலை உள்ளிட்ட புலிகள் காப்பகங்களில், ஒவ்வொறு ஆண்டும் பருவமழைக்கும் முந்தைய மற்றும் பிந்தைய காலங்களில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. ஆண்டுக்கு ஒரு முறை தானியங்கி கேமராக்கள் பயன்படுத்தி புலிகள் கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது. அதேபோன்று தற்போது ஆண்டுக்கு ஒருமுறை, தென்னிந்திய அளவிலான யானைகள் கணக்கெடுக்கும் நடந்து வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இன்று (மே 23) தொடங்கி 25-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. நேர்கோடு முறையில், நீர்நிலைகள் கண்காணிப்பு மற்றும் கால் தடம், எச்சம் ஆகிய முறைகளில் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இதற்காக சேலம் மாவட்டம் மேட்டூர் வனச் சரகத்திற்கு உட்பட்ட உள்ளூர் தண்டா தெற்கு பிரிவு குரும்பனூர் பீட் பகுதியில் யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது.
இந்த கணக்கெடுப்பு பணியில் வனச்சரக அலுவலர் சிவானந்தம் தலைமையிலான குழுவினர் யானைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் வனவர், வனக்காப்பாளர், வனக்காவலர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், தன்னார்வலர்கள் அடங்கிய குழுவினர் யானைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, “யானைகள் கணக்கெடுப்பு 3 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் நாள் (மே 23-ம் தேதி), தொகுதி மாதிரி எடுக்கப்படும். யானைகளின் எண்ணிக்கை, பாலினம், வயது பிரிவுகள் மற்றும் பிற தொடர்புடைய தகவல்கள் உட்பட நேரடியாக கண்காணித்து யானைகளின் தரவுகளைப் பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்படும். யானைகளின் சாணம் மற்றும் கால் தடங்கள் பதிவு செய்யப்படும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும், கணக்கெடுப்பில் யானைகள் பதிவு செய்து புகைப்படம் எடுக்கப்படும்” என்றனர்.