நீலகிரியின் முதல் ஆட்சியர் ஜான் சல்லிவன் பெயரில் பூங்கா: கோத்தகிரியில் அமைச்சர்கள் திறந்துவைப்பு


உதகை: நீலகிரி மாவட்டத்தின் முதல் ஆட்சியர் ஜான் சல்லிவன் பெயரில் 4.08 ஏக்கர் பரப்பளவில் ரூ.88 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய பூங்காவை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் இன்று (செப்.2) திறந்து வைத்தனர்.

நீலகிரியின் முதல் மாவட்ட ஆட்சியராக 1819ம் ஆண்டு இருந்த ஜான் சல்லிவன் நவீன நீலகிரியை உருவாக்கினார். அதன் 200 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் முகமாக ரூ.10 கோடி நிதி ஒதுக்கி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி 2022மே மாதம் முதல் 2023 ஆண்டு மே மாதம் வரை பல்வேறு நிகழ்ச்சிகள் ஜான் சல்லிவன் பெயரில் நடத்தப்பட்டன.

இந்நிலையில், ஜான் சல்லிவன் முதல் முதலாக நீலகிரிக்கு வந்து கோத்தகிரி அருகே உள்ள கன்னேரிமுக்கு பகுதியில் தனக்கென ஒரு பங்களா அமைத்தார். தற்போது அப்பகுதி ஜான் சல்லிவன் நினைவகமாக உள்ளது. ஜான் சல்லீவன் நீலகிரி மாவட்டத்தை கட்டமைப்பதில் பெரும் பங்கு ஆற்றியதன் நினைவாகவும், மலைத் தோட்ட பயிர்களை நீலகிரியில் அறிமுகப்படுத்தியதன் நினைவாகவும், கோத்தகிரி கன்னேரிமுக்கு பகுதியில் அவர் நினைவாக சிறப்பு தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத் துறை சார்பில் ரூ.88 லட்சம் நிதி ஒதுக்கி ரூ.4.08 எக்டர் பரப்பளவில் ஜான் சல்லிவன் நினைவுப் பூங்கா அமைக்கப்பட்டது.

இப்பூங்காவை இன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். கோத்தகிரி மலையின் பசுமையான இயற்கைச் சூழலுக்கு நடுவே அமைந்துள்ள இப்பூங்காவில் பல்வேறு வகையான பூச்செடிகள், அலங்கார மரங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு அம்சங்கள், புல்வெளிகள் உள்ளிட்டவை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன.

பூங்காவை திறந்து வைத்த பின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "கோத்தகிரி கன்னேரி மூக்கு பகுதியில் சல்லிவன் பூங்கா இன்று மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. உதகையில், 53 ஏக்கர் பரப்பளவு கொண்ட குதிரை பந்தய மைதானம் அரசால் கையகப்படுத்தப்பட்டு, தோட்டக்கலைத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இங்கு சூழல் பூங்கா உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இங்குள்ள சதுப்பு நிலம் பாதுகாக்கப்படும். அடுத்தாண்டு கோடை சீசனுக்குள் இந்த பூங்கா மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதனால், உதகைக்கு மேலும் ஒரு சுற்றுலா தலம் உருவாகும். தோட்டக்கலைத் துறை பூங்காக்கள் நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டதால், பூங்காக்களின் பராமரிப்புக்கு அந்த நிதி பயன்படுத்தப்படுகிறது" என்று அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.

அமைச்சர்கள் வருகையின் போது, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அபூர்வா, தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை இயக்குநர் குமரவேல் பாண்டியன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

x