வேடசந்தூர் அருகே தெருநாய்கள் கடித்து ஆடுகள் பலி: நாய்களை கட்டுப்படுத்தக் கோரிக்கை


வேடசந்தூர் அருகே தெருநாய்கள் கடித்ததில் உயிரிழந்த ஆடுகள்.

வேடசந்தூர்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தெருநாய்கள் கடித்ததில் ஆறு ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கல்வார்பட்டி ஊராட்சி வெள்ளையம்பட்டியைச் சேர்ந்த விவசாயி கருப்பன். இவர், ஆடு வளர்ப்புத் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு இவரது ஆட்டுப் பட்டியில் அடைத்து வைத்திருந்த ஆடுகள் திடீரென அலறியுள்ளன. இதையடுத்து கருப்பன் பட்டிக்குள் சென்று பார்த்த போது, ஆடுகளை தெரு நாய்கள் கடித்துக் குதறிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து தெரு நாய்களை விரட்டியடித்துவிட்டு ஆடுகளைப் போய் பார்த்திருக்கிறார். இதில், நாய்கள் கடித்து பட்டியில் இருந்த ஆறு ஆடுகள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதன் மதிப்பு ரூ.70 ஆயிரம். இதே போன்று கடந்த வாரம் இரண்டு ஆடுகள், தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் உயிரிழந்தன.

வேடசந்தூர் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் தெரு நாய்கள் அதிகமாக உள்ளதால் அவை இரவு நேரத்தில் ஆடுகளை அடைத்து வைத்துள்ள பட்டிகளுக்குள் சென்று ஆடுகளை கடித்து குதறும் சம்பவங்கள் தொடர் நிகழ்வுகளாக நடந்து வருகின்றன. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

x