சேத்தியாதோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலை தினக்கூலி தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்


கடலூர்: கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு எம்.ஆர்.கே கூட்டுறவு சர்க்கரை ஆலை தினக்கூலி தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேத்தியாதோப்பில் எம்.ஆர்.கே கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது . இங்கு கடந்த 33 வருடங்களாக 150 பேர் தினக் கூலிகளாக வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் பலர் வயது மூப்பு காரணமாகவும் , உடல்நலம் பாதித்ததாலும் பணியில் இருந்து விலகி விட்டனர். இந்த நிலையில் தற்போது 110 பேர் மட்டுமே தினக் கூலிகளாக பணியாற்றி வருகின்றனர். ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் இவர்கள் பணிக்கு எடுக்கப்படுவார்.

ஆலையில் கரும்பு அரவை முடியும் வரை இவர்களுக்கு பணி வழங்கப்படும். இந்த நிலையில், தங்களுடைய வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று 110 பேரும் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் மனு அளித்து முறையிட்டனர்.

இதனைத்தொடர்ந்து அமைச்சர், ஆலையின் செயல் ஆட்சி அதிகாரியிடம் இவர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஆகஸ்ட் மாதத்தில் சுழற்சி அடிப்படையில் இரு பிரிவாக பணிக்கு வாருங்கள் என்று ஆலையின் செயல் ஆட்சி அதிகாரி தெரிவித்துள்ளார்.

அதாவது 1 முதல் 15ம் தேதி ஒரு பிரிவும், 15 முதல் 31ம் தேதி வரை ஒரு பிரிவும் பணிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி ஆகஸ்ட் மாதத்தில் தினக்கூலி ஊழியர்கள் பணிக்குச் சென்று வந்தனர். இந்த நிலையில் செப்டம்பர் மாதமும் அதுபோல சுழற்சி அடிப்படையில் இரு பிரிவாக பணிக்கு வர வேண்டும் என்று ஆலையின் நோட்டீஸ் போர்டில் செயல் ஆட்சியரால் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

இன்று (செப்.2) பணிக்குச் சென்ற தினக்கூலி தொழிலாளர்கள் இந்த நோட்டீஸை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஒரு மாதம் மட்டுமே சுழற்சி முறையில் பணி மற்ற மாதம் எல்லாம் பொதுவானப் பணி என்றுதான் செயல் ஆட்சியர் கூறினார் என்று தெரிவித்த தொழிலாளர்கள், நோட்டீஸ் போர்டில் இதுபோல் ஒட்டி இருப்பதை கண்டித்து தொடர்ந்து பழையபடியே பணி வழங்க வேண்டும் என்று கூறி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

x