’இந்தியா’ கூட்டணி 2024-ல் பாஜகவை வீழ்த்தும்!


ஜோதிமணி எம்பி

2024 மக்களவைத் தேர்தலை நோக்கிய நடவடிக்கைகளை தேசிய அளவிலும், மாநில அளவிலும் அரசியல் கட்சிகள் துரிதப்படுத்த தொடங்கியுள்ளன. அதன் ஒருபகுதியாக பாஜக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் டெல்லியிலும், அதற்கு நேர் எதிரான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பெங்களூருவிலும் கூடி தங்கள் ஒற்றுமையின் அவசியத்தை உணர்த்தியுள்ளன. இந்த நிலையில் இளைஞர் காங்கிரஸ் முன்னாள் செயலாளரும், கரூர் தொகுதி மக்களவை உறுப்பினருமான ஜோதிமணியிடம் பேசினோம்.

26 கட்சிகளைக்கொண்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ’இந்தியா’ அமைக்கப்பட்டுள்ளதன் முக்கியத்துவம் குறித்து சொல்லுங்களேன்?

இந்தியாவில் மாநிலங்களுடைய உரிமைகள் மறுக்கப்படுகிறது, மக்களுடைய அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகிறது. மக்கள் மனதில் வெறுப்பை உண்டாக்கி சமூகத்தில் ஒரு பதற்றத்தை உண்டாக்கி வருகிறார்கள். உலக அளவில் நாட்டுக்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தி தலைகுனிவு ஏற்படுத்தியுள்ளார்கள். வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவுக்குள் வராமல் இருக்கிறது. இந்தியாவுக்கு உள்ளே வளர்ச்சிக்கான முகாந்திரங்கள் எதுவும் இல்லை. 40 ஆண்டு காலமாக காணப்படாத வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு ஆகியவை தற்போது ஏற்பட்டுள்ளன.

மக்களை பல வகைகளிலும் நசுக்குகின்றனர். எனவே, இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப ’இந்தியா’ கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட நிலைமையில் ’இந்தியா’ என்ன செய்துவிடும் என்கிறீர்கள்?

இதன் பெயரிலேயே எல்லாம் இருக்கிறது. அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்துச் செல்ல வேண்டும் என்கிற நோக்கம் இருக்கிறது. இந்தியா என்ற நாடு பல்வேறு மொழிகள் பல்வேறு வகையான நிலங்கள், பல்வேறு வகையான கலாச்சாரங்கள் கொண்ட நாடு. அதேபோல பல்வேறு மொழிகள் கலாச்சாரங்களை கொண்டவர்கள் அத்தனை பேரும் ஒருங்கிணைந்து இந்த ‘இந்தியா’வை உருவாக்கியிருக்கிறார்கள்.

தொகுதி மக்களுடன் ஜோதிமணி

எல்லோரையும் அரவணைத்துச் செல்வோம், நாட்டின் வளர்ச்சியையும் பாதுகாப்பையும் உறுதி செய்வோம் என்ற நம்பிக்கையை இந்தக் கட்சிகள் மக்களுக்கு வழங்கியிருக்கின்றன. எல்லோருடைய உரிமைகளும் எல்லோருடைய பழக்க வழக்கங்களும் மதிக்கப்படும், எல்லோரும் ஒற்றுமையாக இருக்கலாம் என்ற நம்பிக்கையை ’இந்தியா’ ஏற்படுத்தியுள்ளது.

நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள்... ஆனால், இந்தியா இப்போதுதான் உலக அரங்கில் ஒரு நல்ல இடத்துக்கு வந்துள்ளதாக பாஜக சொல்கிறதே?

நாட்டில் பதற்றமான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. தொழில்கள் நசுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவுக்கு ஆதரவாக இருந்த சிறு நாடுகள் கூட தற்போது இந்தியாவுக்கு எதிர்ப்பான நிலையை எடுத்திருக்கின்றன. விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுபான்மையினர், சிறுகுறு தொழில் செய்பவர்கள், அரசாங்க பணியில் இருப்பவர்கள், ஊடகவியலாளர்கள் என யாருமே மகிழ்ச்சியாக இல்லை. எல்லோருமே இந்த அரசாங்கத்துக்கு எதிராக இருக்கும் சூழல் இருக்கிறது.

அது மட்டுமில்லாமல் இந்தியாவின் ஒருபகுதி நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது. அதை வெளியில் சொல்லக்கூட தைரியம் இல்லாத அரசாக இது இருக்கிறது. இப்படி தோல்வியடைந்த அவமானகரமான மக்களால் வெறுக்கப்படுகிற ஒரு அரசாங்கம் இருப்பது கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத ஒரு நிலைமை.

உங்கள் கூட்டணியில் சேர்ந்திருக்கும் கட்சிகள் மனதளவில் ஒற்றுமையுடன் இருக்கின்றனவா?

அப்படி இருந்ததால்தான் முதல் கூட்டத்தில் கலந்து கொள்ளாத பல கட்சிகள் இரண்டாவது கூட்டத்தில் கலந்து கொண்டன. மூன்றாவது கூட்டம் மகாராஷ்டிராவில் நடக்க இருக்கிறது இதைவிட அதிக அளவில் கட்சிகள் கலந்து கொள்ளும். அதில் இன்னும் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும். சோனியா காந்தி 2014-ல் இதே போன்றதொரு கூட்டணியை கட்டமைத்தார். அதுதான் அப்போது பாஜகவை வீழ்த்தியது. அதேபோல இப்போது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அமைத்திருக்கிற இந்த ‘இந்தியா’ கூட்டணி 2024-ல் பாஜகவை வீழ்த்தும்.

’இந்தியா’ கூட்டணியைப் பார்த்து பாஜக பயந்து போயிருப்பதாக உங்கள் கூட்டணித் தலைவர்கள் சொல்வது சரிதானா?

எங்கள் கூட்டணியில் இருப்பவர்கள் அனைவருமே மிக மிக வலுவான தலைவர்கள். இவர்களின் இந்த ஒற்றுமை பாஜகவுக்கு தோல்வி பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு முன்பு ராகுல் காந்தியுடைய பாரத யாத்திரை அவர்களுக்கு முதலில் பயத்தை உருவாக்கியது. பாட்னாவில் நடைபெற்ற கூட்டம் அவர்களின் பயத்தை அதிகப்படுத்தியது. தற்போது நடைபெற்ற இரண்டாவது கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்களை பார்க்கிறபோது தோல்வி நிச்சயம் என்ற பயம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும்.

39 கட்சிகளுடன் பாஜக அதன் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தை நடத்தியுள்ளதே?

இந்த ஒன்பது ஆண்டு காலத்தில் எப்போதாவது கூட்டணிக் கட்சிகளை அழைத்துக் கூட்டம் போட்டிருக்கிறார்களா? ஆர்எஸ்எஸ் போதும், மோடியின் முகம் போதும் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள், இந்த கூட்டணியைப் பார்த்து பயந்துபோய் தற்போது கட்சிகளை தேடிப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு கூட்டணியை அமைத்தால்தான் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை எதிர்த்து தேர்தலில் போட்டியிட முடியும் என்கிற நிலைக்கு பாஜக தள்ளப்பட்டு இருக்கிறது.

ஊழலுக்கு துணைபோவதற்காக ஒன்று திரண்டிருக்கிறார்கள் என்று ’இந்தியா’ கூட்டணியை பிரதமர் மோடி விமர்சித்திருக்கிறாரே?

பிரதமர் மோடியைவிட ஒரு ஊழல்வாதி வேறு யார் இந்தியாவில் இருக்க முடியும். அதானி என்கிற ஒரு தனி மனிதரிடம் மொத்தமாக இந்தியாவையே விற்கிற நரேந்திர மோடிக்கு இப்படிப் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? அதானி என்ற பெயரைச் சொன்னாலே உங்களுக்கு ஏன் பதற்றம் ஏற்படுகிறது? அந்த ஊழலில் உங்களுக்கு பங்கு இருப்பதால்தானே நீங்கள் பயப்படுகிறீர்கள்.

அத்தனை முன்னாள் அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுக்களை கொண்ட அதிமுகவையும் அதன் பொதுச்செயலாளர் எடப்பாடியையும் எதற்காக அரவணைத்துக் கொண்டிருக்கிறார் மோடி? கட்சியை உடைப்பதற்கு முன் அஜித் பவார் மீது அவர் கூறிய குற்றச்சாட்டுகள் என்ன? என்பதையெல்லாம் அவர் மறந்துவிடலாம்; மக்கள் மறந்து விடுவார்களா?

இந்தியாவில் மிக மிக சுத்தமான ஒரு அரசியல்வாதி என்றால் அது ராகுல் காந்திதான். தற்போது ‘இந்தியா’ கூட்டணியில் இணைந்திருக்கிற அரசியல் கட்சித் தலைவர்களில் யார் மீது நேரடியான ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது? முதல்வர் ஸ்டாலின் மீது இருக்கிறதா? இல்லை சரத்பவார் மீதோ, சோரன் மீதோ, மம்தா பானர்ஜி மீதோ, அர்விந்த் கெஜ்ரிவால் மீதோ யார் மீதாவது நேரடியான குற்றச்சாட்டுகள் இருக்கிறதா என்று சொல்லட்டும் பார்க்கலாம்.

பாஜக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அந்தக் கூட்டணியில் அதிமுகவைத் தவிர்த்து பெரிய கட்சிகள் வேறு எதுவும் இல்லை. அதனால் அந்தக்கட்சிக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் பாஜக வேறு ஏதாவது செய்தி சொல்ல வருகிறதா?

எந்தச் செய்தியும் அவர்கள் சொல்லவில்லை. தமிழக பாஜக தலைவர் பொழுது விடிந்தால் அதிமுகவையும் அதன் பொதுச்செயலாளரையும் விமர்சனம் செய்து கொண்டுதான் இருக்கிறார். ஊழல்வாதிகள் என்றே வெளிப்படையாக விமர்சித்திருக்கிறார் அதையெல்லாம் தாண்டி அப்படிப்பட்டவரை பிரதமர் அழைத்து அவரது அருகில் அமர வைத்து முக்கியத்துவம் கொடுக்கிறார் என்றால் அப்படிப்பட்ட ஒரு தேவை அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதுதான் இதில் இருக்கும் செய்தி.

அப்படி எடப்பாடிக்கு முக்கியத்துவம் அளித்தாலும் தமிழ்நாட்டில் எதுவும் மாறிவிடப் போவதில்லை. பாஜகவுக்கும் ஆர்எஸ்எஸ்சுக்கும் எதிரான வாக்குகள் அதிமுகவையும் சேர்த்து பாதிக்கத்தான் போகிறது. எந்தக்கட்சியுடன் கூட்டணி சேருகிறதோ அந்த கட்சியை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவது பாஜகவின் வழக்கம். காஷ்மீரில் ஆரம்பித்து மகாராஷ்டிரா, பீகார், ஜார்கண்ட் இப்போது தமிழ்நாடு என தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

ஆனால் அதிக கட்சிகளுடன் பாஜக கூட்டணி பலமாக இருப்பதாக சொல்லப்படுகிறதே?

அவர்களால் அமைக்கப்பட்டிருக்கிற அந்த கூட்டணியே அவர்களுடைய பலவீனத்தை பட்டவர்த்தனமாக காட்டுகிறது. அந்தக் கூட்டணியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கட்சிகளுக்கு சட்டமன்றத்திலோ, பாராளுமன்றத்திலோ ஒரு இடம் கூட கிடையாது. அவர்களால் உடைக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளைத்தான் கூட்டணிக் கட்சியாக அழைத்திருக்கிறார்கள்.

தேவதூதரைப்போல மோடியை உருவகப்படுத்துவார்களே... அந்த தேவதூதரை வைத்து இந்தமுறையும் தேர்தலைச் சந்திக்க வேண்டியதுதானே? பிறகு எதற்காக 39 கட்சிகளை தேடி ஓடுகிறார்கள்? எங்களிடம் கூட்டணி இருக்கிறது என்று காண்பிப்பதற்காகவே இவ்வளவு கட்சிகளை அழைத்திருக் கிறார்கள். இப்படிக் காட்டவேண்டிய ஒரு கட்டாயத்திற்கு பாஜக தள்ளப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை நடவடிக்கைகள் குறித்து?

கடந்த 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் இந்த அமலாக்கத்துறை என்ன செய்து கொண்டிருந்தது? பத்தாண்டுகளுக்கு முந்தைய வழக்குகளைத் தேடிப்பிடித்து இப்போது சோதனை செய்வதும் கைது செய்வதும் எதற்காக? இதே அமலாக்கத்துறை பாஜக கூட்டணியில் இருப்பவர்களுடைய வீடுகளுக்குச் செல்ல மறுப்பது ஏன்? செந்தில் பாலாஜி வீட்டிற்கு செல்லும் அமலாக்கத்துறை அருகிலிருக்கும் குட்கா ஊழல்வாதிகளின் வீட்டுக்குச் செல்லாதது ஏன் என்று அடுக்கடுக்கான கேள்விகளை மக்கள் கேட்கிறார்கள்.

அமலாக்கத்துறை இந்த ஆட்சியில் ஒரு சலவை எந்திரம்போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஊழல்வாதியாக அடையாளம் காட்டப்படுகிறவர்கள் வீட்டுக்குச் சென்று சோதனையிட்டு அதன் மூலம் அவர்களை பாஜகவுக்கு அழைத்துச் சென்று அவர்கள் சுத்தமானவர்களாக ஆக்கப்படுகிறார்கள். இப்படி ஒரு வாஷிங் மெஷின் ஆபரேட்டர் போலத்தான் அமலாக்கத்துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இப்படியான சோதனைகள் திமுகவைப் பற்றி ஒரு தப்பான அபிப்பிராயத்தை மக்கள் மத்தியில் உருவாக்கும் என்கிறார்களே?

உருவாக்காது என்றுதான் நான் நினைக்கிறேன். திமுக அரசாங்கம் ஒரு வெற்றிகரமான அரசாங்கமாக செயல்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் மீது மக்கள் முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் கடன் சுமையை ஏற்றி வைத்துவிட்டுப்போய் விட்டார்கள். அது எல்லாவற்றையும் மீறி, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது என்பதை மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்படியெல்லாம் செய்து எதிர்க்கட்சிகளை பயன்படுத்தி இந்த கூட்டணியை ஒன்றுசேர விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. இந்த அழுத்தத்திற்கெல்லாம் திமுகவோ, மற்ற கூட்டணிக்கட்சிகளோ பயந்து விடப்போவதில்லை. உண்மைக்கு எதிராக பொய் நீண்ட காலத்திற்கு நின்று விட முடியாது. இப்படி ஒரு தேவை இருக்கிறது என்பதை எதிர்க்கட்சிகளும் உணர்ந்திருக்கிறது மக்களும் உணர்ந்திருக்கிறார்கள். நரேந்திர மோடிக்கு எதிராக ஒட்டுமொத்த தேசமும் ஒருங்கிணையும் காலம் வந்திருக்கிறது.

உங்கள் கூட்டணிக்கு தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று கருதுகிறீர்கள்?

’இந்தியா’ கூட்டணியில் உள்ளவர்கள் 320 தொகுதிகளுக்கும் அதிகமாக வென்று ஆட்சி அமைப்பது உறுதி. இதுவரையில் தேர்தல் முடிவுகளில் ராஜீவ் காந்தியின் வெற்றி தான் சாதனையாக இருக்கிறது. அடுத்து வரும் தேர்தலில் அதையும் முறியடித்து புதிய சாதனை புரிவோம்.

x