ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஏற்கெனவே கோதுமை, அரிசி, பருப்பு ஆகியவை வழங்கப்பட்டு வரும் நிலையில் இனி கடுகு எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகியவையும் இலவசமாக வழங்கப்படும் என பாஜக வாக்குறுதி அறிவித்துள்ளது.
5 மாநிலங்களில் நடந்து வரும் சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த பணிகளுக்கு இடையே, மத்திய பிரதேசத்தில் பாஜக தலைவர் ஜேபி நட்டா தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டார்.
நாட்டின் 15 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 80 கோடி பயனாளிகளுக்கு 5 ஆண்டுகளுக்கு இலவச உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவதாக பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்தார். இந்த நிலையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தற்போது மற்றொரு அறிவிப்பையும் பாஜக தேசிய தலைவர் நட்டா வெளியிட்டுள்ளார்.
பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய நட்டா, "கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகள் அதிக பலன்களைப் பெறுவார்கள். ஏற்கெனவே கோதுமை, அரிசி, பருப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இப்போது கடுகு எண்ணெய் மற்றும் சர்க்கரையும் சேர்த்து கொடுக்கப்படும். இந்த சலுகையை தகுதியான பயனாளிகளுக்கு வழங்க பாஜக சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
அத்துடன் மத்திய பிரதேச குடும்பத் தலைவிகளுக்கு மற்றொரு அசத்தல் அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.450க்கு தரப்படும் என்று அவர் உறுதியளித்தார். தேர்தல் அறிக்கையின்படி , லட்லி பெஹ்னா யோஜனா திட்டத்தின் பலன்களுடன், ஒரு லட்சம் பெண்களுக்கு நிரந்தர வீடும் வழங்கப்படும் என்றும் பாஜக தலைவர் கூறினார்.
லட்லி லட்சுமி மற்றும் பிராமின் யோஜனா மூலம் பெண்கள் அதிகாரம் பெறுகின்றனர். பழங்குடியினர் நலனுக்காக ரூ.3 லட்சம் கோடி வழங்கப்படும். மருத்துவக் கல்வியை வழங்கும் முதல் மாநிலம் மத்தியபிரதேசம். பா.ஜ.க இன்று வரை சொன்னதை நிறைவேற்றியுள்ளது" என்று நட்டா தெரிவித்துள்ளார்.