தமிழ்நாட்டில் ஆபரேஷன் லோட்டஸ்... கே.பி.ராமலிங்கம் சொல்லும் கணக்கு நடக்குமா?


கே.பி. ராமலிங்கம்

மக்களவைத் தேர்தலுக்குப் பின் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடக்கும் என்று பாஜக துணைத் தலைவர் கே பி ராமலிங்கம் கூறியிருக்கிறார். ஆனால் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்று அடித்துச் சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

பாஜக கொடி

தமிழ்நாடு பாஜகவின் மாநில துணைத் தலைவர் கே.பி ராமலிங்கம் அண்மைக் காலமாக தொடர்ந்து ஒரு கருத்தை முன்வைத்து வருகிறார். 2024 மக்களவைத் தேர்தலுக்கு பின் திமுகவின் 2 பங்கு எம்எல்ஏக்கள், அதிமுகவின் 5-ல் 4 பங்கு எம்எல்ஏக்களை பாஜகவுக்கு கொண்டுவந்து பாஜக ஆட்சி அமைக்கும் என்பதுதான் அவரது கருத்து.

ஒவ்வொரு மாநிலத்திலும் எந்த வகையிலாவது பாஜக ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்பது அக்கட்சியின் நிலைப்பாடு. அதற்காக எந்த அளவிற்கும் செல்வார்கள் என்பது கடந்த கால மற்றும் நிகழ்கால வரலாறு. அதற்காகவே ஆபரேஷன் தாமரையை பல மாநிலங்களில் செயல்படுத்தி இருக்கிறது. உதாரணமாக மகாராஷ்டிராவில் சிவசேனாவை 2 ஆக உடைத்தது, தேசியவாத காங்கிரஸை இரண்டாக உடைத்தது.

தமிழ்நாடு சட்டமன்றம்

இந்த உடைக்கப்பட்ட அணிகளுடன் இணைந்து புதிய ஆட்சியையும் அமைத்தது. கர்நாடகாவிலும் கூட முன்னர் காங்கிரஸ் – ஜேடிஎஸ் எம்எல்ஏக்களை வளைத்துப் போட்டு ஆட்சியை கைப்பற்றியது. மத்தியப் பிரதேசத்திலும் இதே பார்முலாவை கையில் எடுத்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த மாநிலங்களில் எல்லாம் பாஜகவுக்கு கணிசமான எம்எல்ஏக்கள் இருந்தார்கள். தமிழ்நாட்டில் நிலைமை அப்படி இல்லை.

தமிழ்நாட்டில் மொத்தம் 234 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்கள் தேவை. தமிழ்நாடு சட்டசபையில் தற்போது திமுக 133, காங்கிரஸ் 18, இந்திய கம்யூனிஸ்ட் 2, விசிக- 4, மார்க்சிஸ்ட் 2 என திமுக கூட்டணி மொத்தம் 159 எம்எல்ஏக்களை வைத்திருக்கிறது. இதுதவிர அதிமுக 66, பாமக 5, பாஜக 4 என எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் மொத்தம் 75 பேர் உள்ளனர்.

வெறும் 4 எம்எல்ஏக்களை வைத்திருக்கும் பாஜக, ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றால் இன்னும் 110 எம்எல்ஏக்கள் தேவை. திமுக, அதிமுக எம்.எல்.ஏக்களை சரிபாதியாக பிளவுபடுத்தினால் கூட பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாது என்பதுதான் கள யதார்த்தம். ஒருவேளை எடப்பாடி பழனிசாமி தவிர எஞ்சிய 65 எம்எல்ஏக்களையும் வளைத்தாலும் கூட பாஜகவால் ஆட்சி அமைக்க தேவையான 114 எம்எல்ஏக்களைப் பெறவே முடியாது.

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக ஆகியவை பாஜகவுடன் இணைந்து ஆட்சியில் பங்கேற்க வாய்ப்பு இல்லை. காங்கிரஸை உடைத்தாலும் கூட ஆட்சிக்குத் தேவையான எண்ணிக்கையை பாஜகவால் எட்ட முடியாது. அதனால் இப்போதைய நிலையில் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்க சாத்தியமே இல்லை என்பதுதான் கள நிலவரம். ஆனால் கே.பி.ராமலிங்கம் எதை வைத்து இப்படிச் சொல்கிறார் என்பது தான் தெரியவில்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

x