மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தென்சென்னை தொகுதி சட்ட ஆலோசகர்களில் ஒருவராக சீமானின் மனைவி கயல்விழி காளிமுத்து நியமிக்கப்பட்டுள்ளதை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் திரைப்பட இயக்குநர் சீமான். இவர் தமிழக சட்டப்பேரவை தலைவராக இருந்த காளிமுத்துவின் மகள் கயல்விழியை 2013-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தமிழ் தேசியத்தை வலியுறுத்தி அரசியல் நடத்தும் சீமான், திமுகவின் குடும்ப அரசியலை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். ஆனால், அவரது மனைவி கயல்விழியை நாம் தமிழர் கட்சியின் பொறுப்பிற்கு கொண்டு வர முயற்சிக்கிறார் என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக உள்ளது.
நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியாக இருந்த தடா சந்திரசேகரின் படத்திறப்பு விழாவில் சீமான் மனைவி கயல்விழி காளிமுத்து முதல் முறையாக பங்கேற்று பேசினார். அப்போது கயல்விழி அரசியலுக்கு வருவாரா என சீமானிடம் செய்தியாளர்கள் வினா எழுப்பினர். ஆனால், அதற்கு சிரிப்பை மட்டும் சீமான் பதிலாக தந்தார். கயல்விழியின் சகோதரர் அருண்மொழித்தேவன் விருதுநகர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 2019-ம் ஆண்டும் இவரே வேட்பாளராக அந்த தொகுதியில் நிறுத்தப்பட்டார்.
இந்த நிலையில் தென்சென்னை மக்களவைத் தொகுதியின் இரண்டு சட்ட ஆலோசகர்களில் ஒருவராக கனிமொழி காளிமுத்து அறிவிக்கப்பட்டுள்ளார். குடும்ப அரசியலை கடுமையாக விமர்சனம் செய்து வரும் சீமான் மனைவி, மைத்துனர் ஆகியோருக்கு நாம் தமிழர் கட்சியில் முக்கியத்துவம் கொடுத்து வருவது எப்படி சரி என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
'என் பேச்சை நானே கேட்க மாட்டேன்' என்ற நடிகர் விஜயின் டயலாக்கை எடுத்துப் போட்டு 'அண்ணன் பேச்சை அண்ணனே கேட்கமாட்டாரு' எப்போதும் சொன்னதற்கு எதிராகவே நடந்து கொள்வது தான் சீமானின் குணம் என அவரது பழைய பேச்சையும், தற்போதைய பேச்சையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.