பருவமழைக்கு தயாராகும் சென்னை மாநகராட்சி: வடிகால்களில் தூர்வாரும் பணிகள் தொடக்கம்


சென்னை மூலக்கொத்தளம் அருகே பக்கிங்ஹாம் கால்வாயில் ஆகயத்தாமரை செடிகளை இயந்திரங்கள் மூலம் அகற்றும் மாநகராட்சி பணியாளர்கள்.

சென்னை: சென்னை மாநகராட்சியில் 2 ஆயிரத்து 624 கி.மீ., நீள மழைநீர் வடிகால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவை, ஓட்டேரி நல்லா, கொடுங்கையூர் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய் மற்றும் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் போன்றவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன.

மழைக் காலங்களில் மாநகரில் பெய்யும் மழைநீரை வடிய செய்வதில் இந்த மழைநீர் வடிகால்களும், கால்வாய்களும் முக்கிய பங்காற்றுகின்றன. இன்னும் சில தினங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. அதன் பின்னர் அக்டோபர் 20-ம் தேதி வாக்கில் தமிழகத்துக்கு அதிக மழையை கொடுக்கும் வடகிழக்கு பருவமழையும் தொடங்க உள்ளது. இதற்குத் தயாராகும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகளை இன்று தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நம்மிடம் பேசுகையில், “மாநகராட்சி பராமரித்து வரும் 2 ஆயிரத்து 627 மழைநீர் வடிகால்களில் கடந்த ஆண்டு 1,731 கிமீ நீளத்துக்கு தூர்வாரப்பட்டு, மழைநீர் இடையூறு இன்றி வழிந்தோடுவது உறுதி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் மழைநீர் வடிகால்களில் நீர் வெளியேறாமல் தேங்கும் இடங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

அதில் 724 கி.மீ., நீள மழைநீர் வடிகால்கள் நல்ல நிலையில் இருப்பதும், 1,900 கி.மீ., நீளத்துக்கு தூர்வார வேண்டி இருப்பதும் தெரியவந்துள்ளது. அதன்படி, வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அவைகளைத் தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக ஒவ்வொரு மண்டலத்துக்கும் தலா ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அனைத்து மண்டலங்களிலும் தூர்வாரும் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன. மேலும், இந்த மழைநீர் வடிகால்களை ஒட்டி, 73 ஆயிரத்து 500 வண்டல் வடிகட்டி தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவைகளும் தூர்வாரப்படுகின்றன. இந்தப் பணிகளை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல் மாநகராட்சி சார்பில் 33 கால்வாய்கள் 53.42 கி.மீ., நீளத்துக்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. அனைத்திலும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதில் தலா 2 பெரிய ஆம்பிபியன், சிறிய ஆம்பிபியன் இயந்திரங்கள், 4 ரோபோடிக் எஸ்கவேட்டர் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பணிகளை அக்டோபர் மாதத்துத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்றனர்.

x