சங்கர் ஐஏஎஸ் அகாடமிக்கு ரூ.5 லட்சம் அபராதம்: சிசிபிஏ நடவடிக்கை


கோப்புப் படம்

சென்னை: யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் 2022 தொடர்பாக தவறான விளம்பரம் அளித்ததற்காக சங்கர் ஐஏஎஸ் அகாடமிக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன் விதிகளை மீறும் எந்தவொரு பொருள் அல்லது சேவைக்கும் தவறான அல்லது தவறாக வழிநடத்தும் விளம்பரம் செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்கர் ஐஏஎஸ் அகாடமி யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு 2022 தொடர்பான அதன் விளம்பரத்தில், "அகில இந்திய அளவில் 933 பேரில் 336 பேர் தேர்வு", "முதல் 100 இடங்களில் 40 பேர்", "தமிழகத்தில் 42 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர், அவர்களில் 37 பேர் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் படித்தவர்கள்", "இந்தியாவின் சிறந்த ஐஏஎஸ் அகாடமி" உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

சங்கர் ஐஏஎஸ் அகாடமி பல்வேறு வகையான படிப்புகளை விளம்பரப்படுத்தியிருந்தது. ஆனால் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் விளம்பரம் செய்யப்பட்ட வெற்றிபெற்ற தேர்வர்கள் தேர்வு செய்த பாடங்கள் குறித்த தகவல்கள் விளம்பரத்தில் வேண்டுமென்றே மறைக்கப்பட்டுள்ளதாக சிசிபிஏ விசாரணையில் கண்டறியப்பட்டது.

அந்த விளம்பரம், வெற்றிபெற்ற அனைத்து தேர்வர்களும் அதன் இணையதளத்தில் நிறுவனம் விளம்பரப்படுத்திய கட்டணப் படிப்புகளைத் தேர்ந்தெடுத்ததாக நுகர்வோருக்கு தவறான நம்பிக்கையை ஏற்படுத்தியதாக சிசிபிஏ தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலளித்த, சங்கர் ஐஏஎஸ் அகாடமி சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்றதாக சொல்லபப்டும் 336 தேர்வர்களில் 333 பேரின் தகவல்களை மட்டுமே சமரிப்பித்துள்ளது.

இது குறித்து சிசிபிஏ தலைமை ஆணையர் நிதி கரே கூறுகையில், “ஒவ்வொரு ஆண்டும் யுபிஎஸ்சி குடிமைப்பணிகள் தேர்வுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கின்றனர். சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் விளம்பரம் யுபிஎஸ்சி தேர்வர்களை இலக்காகக் கொண்டுள்ளது. அதனால்தான் இத்தகைய விளம்பரங்கள் உண்மையான, நேர்மையான பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்க வேண்டும்” என்றார்.

x