மக்களவைத் தேர்தலில் போட்டியா?- ஆண்டவன் முடிவு செய்வார் என்கிறார் ஆளுநர் தமிழிசை


ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரி லாஸ்பேட்டையில் உழவர் கரை நகராட்சி பராமரிப்பில் சிறுவர் பூங்கா இயங்கி வருகிறது. பழைய பூங்காவாக இருந்த இது தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவினை துணைநிலை ஆளுநர் தமிழிசை திறந்து வைத்தார். பூங்காவில் குழந்தைகளுக்கான ஊஞ்சல் சறுக்கு மரம் போன்றவற்றை பார்வையிட்ட அவர் பள்ளி மாணவர்கள் விளையாடுவதை கண்டு ரசித்தார்.

பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், ``புதுச்சேரியில் 123 பூங்காக்கள் உள்ளன. இதில் 70 பூங்காக்கள் நல்ல இடவசதியுடன் இருக்கிறது. இவைகள் தான் நகரத்தின் நுரையீரல். மிஷன் பார்க் என்ற பெயரில் முதல் கட்டமாக 25 பூங்காக்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன என்றார். மருத்துவப் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டே 10% உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அனைத்து பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

மக்களவை தேர்தலில் தமிழிசை போட்டியிட விருப்பம் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை என தெரிவித்தார். மேலும், தேர்தலில் போட்டியிடுவது குறித்து தன்னால் எதுவும் சொல்ல முடியாது. இப்போது ஆளுநராக இருக்கிறேன், தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆண்டவனும் ஆள்பவனும் முடிவு செய்வார்கள் என தமிழிசை பதிலளித்தார்.

மேலும், மணிப்பூர் கலவரம் வருத்தம் அளிக்கிறது. பிரதமர் நடவடிக்கை எடுப்பார். இனி இது போன்ற சம்பவங்கள் நிகழாத கூடாது என்பதுதான் எனது எண்ணம் . பாலியல் குற்றங்களுக்கு தூக்குத் தண்டனை போன்ற தண்டனை வழங்க வேண்டும் என ஏற்கெனவே வலியுறுத்தி வருகிறேன் என ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.

x