சென்னை: சென்னை - கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை - கோடம்பாக்கம், ஆற்காடு சாலையில் பிரபலமான மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதன் வளாகத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சற்று நேரத்தில் வெடித்துச் சிதறும். முடிந்தால் தடுத்துக் கொள்ளுங்கள் என இன்று காலை இ-மெயில் ஒன்று வந்திருந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீஸார் இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் பிரிவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு காலை 10.45 மணியளவில் சென்று பள்ளி மற்றும் அதன் வளாகம் முழுவதும் சோதனை நடத்தினர்.
முடிவில் சந்தேகப்படும்படியான எந்த பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் புரளியை கிளப்பும் வகையில் விடுக்கப்பட்டது தெரியவந்தது. இந்த விவகாரம் குறித்து கோடம்பாக்கம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, விமான நிலையம் மற்றும் வணிக வளாகங்களில் புரளியை கிளப்பும் வகையில் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இவற்றை யாரும் நம்ப வேண்டாம். மேலும், மிரட்டல் வந்தால் அதை அலட்சியப்படுத்தாமல் அதுகுறித்து தங்களது கவனத்துக்கு கொண்டு வர வேண்டும் என போலீஸ் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.